கார் ஒன்று, சாலையில் யு வளைவில், திரும்பும் போது காரின் கதவு திடீரென்று திறந்த நிலையில் அதிலிருந்து சிறார் ஒருவர் கீழே விழுந்த சம்பவம் தொடர்பில் அந்த காரின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர் என்று கிளந்தான் மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.
நேற்று செவ்வாய்க்கிழமை, மாலை 5.42 மணியளவில் கோத்தாபாரு, ஜாலான் சுல்தான் யாயா பெத்ரா சாலையில் நடந்த இச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வளைத் தளத்தில் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
காரிலிருந்து கீழே விழுந்த அந்த சிறார், வாகனங்கள் மத்தியில் எழுந்து நடக்க முற்படும் போது, எதிர்பாராத விதமாக அந்த U வளைவில் திரும்பிய மற்றொரு வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு தூக்கி எறியப்படுகிறார்.
கீழே விழுந்த நிலையில் அந்த சிறார் மீண்டும் எழுந்து நடக்கும் போது இதர வாகனமோட்டிகளால் காப்பாற்றப்படுகிறார்.
காரின் கதவை சரியாக பூட்டாமல் கவனக்குறைவாக செயல்பட்ட அந்த வாகனமோட்டியிடம் விசாரணை நடத்துவதற்கு அவரை போலீசார் தேடி வருவதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் ஷாக்கி ஹருன் தெரிவித்துள்ளார்.