தமிழ் இசை

இந்திய  நாடு சில ஆயிரம் ஆண்டுகளாகவே இசைத் துறையிலும், நாட்டியத்திலும் ஈடு இணையற்ற இடம்பெற்று திகழ்கிறது.

வேத காலத்தில் இருந்தே இசையைப் பெரிதும் மதித்து அதற்குத் தனி இடம் கொடுத்து, இசையால் பாடப்படும் வேதம் எனச் சாமவேதத்தை வகுத்துள்ளனர்.

பிற்காலத்தில் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் மலர்ந்த ராகங்கள் அந்தந்தத் தேசங்களின் பெயர் கொண்டு திகழ்ந்தன.

கெளட தேசத்தின் பெயரால் ‘கெளளை’ என்னும் ராகமும், செளராஷ்டிர தேசத்தின் பெயரால் ‘செளராஷ்டிரம்’ என்னும் ராகமும், காந்தாரம், விராடம், கூர்ஜ்ஜரம் என்றெல்லாம் அந்தந்தப் பகுதிகளின் பெயரால் ராகங்கள் உள்ளன.

 இவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட ராகங்களாக உள்ளன.

இந்தியாவின் வடப்பகுதியில் உள்ள இசையை மொத்தமாக ஒரு பெயரால் அழைக்க வேண்டும் என்றால் அதை ”ஹிந்துஸ்தானி சங்கீதம்” என்றுதான் அழைக்க வேண்டும்.

அந்தப் பெயரிலிருந்தே ஓர் உண்மை புலப்படும். கி.பி. 12ஆம் நூற்றாண்டுக்குப் பிறகுகூட இந்தியாவில் இஸ்லாமிய தாக்கம் அதிகம் ஏற்பட்டது. அதனால், அராபிய இசை, பாரசீக இசை இவற்றின் தாக்கத்தால் இந்திய இசை பெரிதும் பாதிக்கப்பட்டது.

அந்தத் தாக்கத்தால் மருவி திகழ்வதே இன்றைய இந்துஸ்தானி சங்கீதம். இதைப் பண்டைய இந்தியச்  சங்கீதத்தின் மாற்று வடிவம்  என்று சொல்லலாம்.

தென் இந்தியாவைப் பொறுத்தமட்டில் இரண்டு மரபுகளை நாம் காண்கிறோம்.

ஒன்று தமிழில் தேவாரம் பாடுகின்ற பண்முறை.

மற்றொன்று கர்நாடக இசை.

நாம் இப்போது கர்நாடக இசை என்று சொல்வது இருநூறு ஆண்டுகளுக்கு முன் இந்த இசைக்கு ஒப்பரும்  தொண்டாற்றிய தியாகராஜ சுவாமிகள், சாமா சாஸ்திரிகள், முத்துசுவாமி தீட்சதர் ஆகிய சங்கீத  மும்மூர்த்திகள் ஆவார்கள். அவர்கள் அதற்கு முன்பு இருந்த தேவாரம், மூவர் இயற்றிய இசைப்பாடல் மரபையே பின்பற்றி பாடிய வரிகளில் அதையே கர்நாடக இசை என்கிறோம்.

இந்த இசை மரபுக்கு இலக்கணம்  வகுத்தவர் ‘வேங்கடமகி’ என்ற பெரியவர். இவர் தஞ்சையில் நாயக்கர் ஆட்சியில் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்.

விஜயராகவ நாயக்கர் என்ற மன்னர் காலத்தில் இருந்தவர். அதாவது 1650ஆம் ஆண்டில் வாழ்ந்தவர்.

அவர் இயற்றிய “சதுர்தண்டிபிரகாசிகை” என்ற நூலில்தான் இன்றைய கர்நாடக இசைக்கான இலக்கணங்களைத் தெளிவாக அறிய முடிகிறது.

அவர் வகுத்துள்ள மரபு படிதான் இன்றைய கர்நாடக இசையைப் பாடுகிறோம்.

அவருக்குப் பின் வந்தவர்கள்தாம் சங்கீத மும்மூர்த்திகளான தியாகய்யர், தீட்சதர், சாமா சாஸ்திரிகள் ஆவர்.

 வேங்கடமகி தமது நூலில் ராகங்களைச் சுத்தமத்திம ராகங்கள், பிரதி மத்திம ராகங்கள் எனப் பிரிக்கிறார்.

அதோடு சிலவற்றை “மேளகர்த்தா ராகங்கள்”, “ஜன்ய ராகங்கள் என்றும் பிரிக்கிறார்.

இந்த மரபுதான் இன்றைய கர்நாடக இசையின் மரபு ஆகும்.

தேவாரப் பதிகங்களைப் பாடும் மரபைப் “பண்முறை”என்கிறோம். இதைத்தான் “தமிழ் இசை” என்றும் அழைக்கிறோம்.

தமிழ்நாட்டில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக  இசை பாடும் மரபைப் “பண்பாடு” என்றுதான் கூறியுள்ளனர்.

சங்க இலக்கியங்களிலேயே பண்பாடுவதாகக் குறிக்கப்படுகிறது.

“பரிபாடல்” முழுவதும் பண்களில் அமைக்கப்பட்டு இசைக்கப்பட்டன என்பதற்கு அவற்றிலேயே குறிப்புகள் உள்ளன.

சிலப்பதிகாரத்திலும் இதே மரபைக் காண்கிறோம். தேவாரப் பதிங்களை இயற்றிய  சான்றோர்கள் அவற்றை இசைப்பாடல்கள் என்னும் பண்களில் பாடப்படுபவை என்பதையும் குறிப்பர்.

காந்தாரம், இந்தளம், செவ்வழி, குறிஞ்சி முதலிய பண்களை நாயன்மார்களே தங்களது பதிங்கங்களில் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

தேவார மூவர் காலத்தில் இருந்தே இப்பதிகங்கள் கோயில்களில் பண்முறையில் பாடப்பட்டு வந்தன. கி.பி.8 மற்றும் கி.பி. 9ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் கோயில்களில் இவற்றைப் பாட இசை வல்லுநர்களை அமர்த்தி இருக்கிறார்கள் என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன.

பல்லவ அரசன் நந்திவர்மன் சோழப் பேரரசர்கள்  பராந்தகன் முதலியோர் கல்வெட்டுகள் இவற்றைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

முதலாம் இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயிலில் இசை வல்லுநர்கள் 50 பேரை நியமித்தான்.

மறைந்து போன பதிகங்களை நம்பியாண்டார் நம்பியின் உதவியோடு தில்லையில் கண்டுபிடித்தான்.

திருநீலகண்ட யாழ்ப்பாணர் மரபில் வந்த ஒரு பெண்ணின் உதவியோடு அவற்றின் பண்களை வகுத்தான் என்று வரலாறுகள் கூறுகின்றன.

எனவே, இன்று நாம் பாடும் மரபு இராஜராஜ காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் இசை மரபு.

அதற்கும் நானூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த மரபைத்தானவன் வகுத்துக் கொண்டான் என்பதைத் தெரிவிப்பதுதான் திருநீலகண்டயாழ்ப்பாணர் மரபு.

திருஞானசம்பந்தர் பாடல்களைப் பாட, உடன் இருந்து அவற்றை திருநீலகண்டயாழ்ப்பாணர் தமது யாழில் இசைத்தார் அல்லவா?

அந்த மரபுதான் இந்தப் பண் மரபு.

சங்க காலத்திலிருந்து, தேவார மூவர் காலத்திலும் நிகழ்ந்தது-

இராஜராஜன் காலத்திலும் நிகழ்ந்தது-

பின்னர் தமிழகமெங்கும் தெய்வீக இசையாக நிகழ்ந்து வந்ததுதான் இந்தப் பண்முறை.

இது வரலாற்று உண்மை. பண்களைத்தான் ராகங்கள் என்று கூறுகிறோம்.

‘பண்’ என்பது தொன்மையான பெயர்.

ராகம் என்பது பரவலாக இப்பொழுது கூறப்படும் பெயர்; அவ்வளவுதான்.

‘கர்நாடக இசை’ என்பது அண்மைக் காலத்தில் வந்த பெயர்தான். 1650ஆம் ஆண்டு வேங்கடமகி என்பவர் வகுத்த இலக்கணத்தின்படி பாடுவதைத்தான் ‘கர்நாடக சங்கீதம்’ என்று கூறுகிறோம்.

வேங்கடமகி என்ன சொல்கிறார் தெரியுமா?

“நான் ஒன்றும் புதிதாக இசைக்கு இலக்கணத்தை வகுத்துவிடவில்லை”.

“ஏற்கனவே இங்கு இருந்த இசையைத்தான் தொகுத்துள்ளேன்”. ஒன்றுபோல் உள்ள ராகங்களோர் இனமாகத் தொகுத்து மேளகர்த்தா ராகங்கள் என்றும், ஜன்ம ராகங்கள் என்றும் பாகுபாடு செய்துள்ளேன்.

“இது ராகங்களின் கூட்டத்தை அறிந்து கொள்ள எளிதாக இருக்கும்” என்று எழுதியுள்ளார்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பாடி வந்த பண்களைத்தான் வேங்கடமகி வகைப்படுத்தி இருக்கிறார். இஃது அவரே கூறி இருக்கும் உண்மை.

அவர் எங்கிருந்த மரபை எடுத்து  வகைப்படுத்தினார் என்பதை அவரது நூலிலேயே குறிப்பிட்டு இருக்கிறார்.

அவர் நூலில் ராக ஆலாபனையைக் கூறும் ஓர் அத்தியாயம் உள்ளது.

ராகங்களை முதலில் எடுப்பது எப்படி? படிப்படியாக ஆலாபனையை விரிவாக்குவது எப்படி? முடிப்பது எப்படி என்றெல்லாம் எழுதியிருக்கிறார்.

அவருடைய நூல் சமஸ்கிருத மொழியில் இருக்கிறது.

அதில்தான் அவர் கூறுகிறார்: ராகத்தை எடுப்பது என்று ஒருமுறை. இதை “ராக வர்த்தனி” என்று கூறுகிறார். இது சமஸ்கிரத பெயர்.

இதையே மக்கள் “எடுப்பு” என்று கூறுகிறார்கள் என்பதை “இயம் ஏவ ஜனை; லோகே எடுப்பு இதி அபி தீயதே” என்று கூறுகின்றார்.

“எடுப்பு” என்ற சொல் சமஸ்கிருதச் சொல்லே அல்ல. பிராகிருத சொல்லும் அல்ல. நல்ல தமிழ்ச் சொல்.

இந்தத் தமிழ்ச் சொல்லைத் தமது சமஸ்கிருத நூலில் அப்படியே பயன்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமில்லை, இவ்வாறு மக்கள் கூறுகிறார்கள் என்றும் அழுத்தமாகச் சொல்கிறார்.

இதில் இருந்து  தமிழ் வழக்கில் இருந்த பண்களை எடுத்து தமது நூலில் வகுத்துள்ளார் என்பது தெளிவு.

ஏற்கனவே நம்மிடையே வழக்கில் இருந்த இசை மரபைத்தான்  வேங்கடமகி வகுத்துள்ளாரே ஒழிய தாமாகப் புதிதாக ஒன்றையும் அவர் அமைக்கவில்லை .

எனவே, வேங்கடமகியின் மரபைப் பின்பற்றும் இன்றைய கர்நாடக இசை என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் நிகழ்ந்த இசை மரபுதான் என்பதில் எந்தவித சந்தேகமும்  இருக்க முடியாது.

அது நமது தமிழிசையான பண்ணிசைதான் .

மற்றும் ஒன்றையும் கூற வேண்டும். இரண்டாயிரம் ஆண்டுகளாக  நம்மிடையே திகழ்ந்து வரும் பண்கள் எல்லாம் இன்று நம்மிடையே உள்ளன என்று எண்ணி  விடக்கூடது.

பல பண்களை நாம் காலப்போக்கில் மறந்துவிட்டோம்.

அதனால்தான் இரண்டு அல்லது மூன்று வெவ்வேறு பண்களை ஒரே ராகத்தில் இன்று பாடுகிறோம்.

நட்டராகம், சாதாரி என்ற இரண்டு பண்களையும் பந்துவராளி என்ற ஒரே ராகத்தில் பாடுகிறோம்.

அதேபோல் கொல்லி, கொல்லிக் கெளவானம், பியந்தைக் காந்தாரம் என்ற மூன்று பண்களையும் “நவரோஜ்” என்ற ராகத்தில் பாடுகிறோம்.

இந்தப் பண்களுக்கு வெவ்வேறு பெயர் இருப்பதில் இருந்தே இவற்றை வெவ்வேறு விதமாகப் பாட வேண்டும் என்பது தெளிவு.

நாமோ அவற்றை ஒரே ராகத்தில் பாடுகிறோம். காரணம் பல பண்களின் ராகங்களை மறந்துவிட்டோம். எஞ்சியுள்ளது பதினைந்து ராகங்கள்தாம்-பண்கள்தாம்.

இந்திய நாட்டின் மிகவும் தொன்மையான இசை மரபு வடப்பகுதியில் இருந்து மருவி இந்துஸ்தானி சங்கீதமாக மாறிவிட்டது.

தென்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பாடப்பட்டு வரும் இசை தமிழிசைதான்.

அதிலும் ஒரு பகுதிதான்  எஞ்சி இருக்கிறது.

இந்திய நாட்டின்    தொன்மையான இசை மரபு        மாறாது தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகிற மரபு தமிழிசைதான்.

எனவே, தமிழிசையைப் பேணி காப்பாற்ற வேண்டும். இஃது இந்திய இசையைப் பேணிக் காப்பாற்ற வேண்டும் என்று ஆர்வமுள்ள அனைவரும் மேற்கொள்ள வேண்டிய புனிதமான பணியாகும்.

இந்திய நாட்டில் உள்ள எல்லா இசைவானர்களும் மேற்கொள்ள வேண்டிய தலையாயப் பணி.

WATCH OUR LATEST NEWS