கல்லு உருண்டை இல்லாத தீபாவளியா?

அந்த காலத்துல எங்க ஏரியாவுல எப்படி இருந்த தெரியுமா? இப்போ ஒருத்தனோ கண்டுக்கமாட்டீங்கிறா. எனக்கோ ஒரு காலோ வரோ அப்புற உங்க எல்லாத்தையோ பார்த்துக்கிறன். புதுசா ஏரியாவுக்கு வந்துட்டு சீனப்போடுறீங்களா. உங்கள மாதிரி சோம்பேறி இல்ல நானு.

அப்போ தீபாவளி வந்துட்டாலே எஸ்டேட்டுல என்ன தூக்கிகிட்டு வீட்டுக்கு வீடு தேரு மாதிரி கொண்டு போவாய்ங்க. ஆஹா, என்ன ஒரு கண்கொள்ளாக் காட்சி. எப்படி சுகமாக இருந்துச்சு தெரியுமா. தேரு மாதிரி என்ன நினைச்சிட்டு இப்ப வெறுங்கல்லா தூக்கி போட்டாய்ங்க.

சும்மாதானா நீ ஒரே இடத்துல குத்த வச்சு உட்கார்ந்திருக்க என்னோட கதைய சொல்லுற கேளு அப்பயாச்சோ என் அரும பெரும புரியிட்டோ உங்களுக்கு.

ஒவ்வொரு வருடம் ஐப்பசி மாதம் வந்தாலே  எஸ்டேட்டுல இருக்கிற எல்லாரும் என்ன தேட ஆரம்பிச்சிருவாங்க. ஊரே தீபாவளி கொண்டாட்டத்தில் இருக்கும் போது எனக்கும் தீபாவளிதான். அந்த ஒரு மாதம் எனக்கு ஓய்வே இருக்காது. நானும் சளிக்காமல் அங்கேயும் இங்கேயும் ஓடிச் சென்று கடுமையாக உழைப்பேன்.

பயறு, உழுந்து போன்ற எனது நண்பர்களை உடைத்துப் பருப்பு ஆக்குவதற்கு நான் பெரும் உதவியாக இருப்பேன். என் நண்பர்களும் என்னோடு சேர்ந்து உல்லாசமாய் வேலைகளை செய்வார்கள். என்னை பொதுவாகவே கருங்கல்லினால்தான் உருவாக்குவார்கள். அவ்வளவு பலசாலி மிக்க குழந்தை நான்.

எனக்கு மேல் முகம், கீழ் முகம் என்று  இரண்டு முகங்கள் இருக்கும் தெரியுமா. ஒன்று நிலையாக இருக்கும் கீழ்ப்பகுதி. கிடைத் தளத்தில் வட்ட வடிவமாக இருப்பேன். எனது அளவுக்குத் தக்கபடி உயரம் உள்ளதாயிருக்கும். எனது மேற்பகுதியின் மையத்தில் நிலைக்குத்தாகப் உருவாக்கப்பட்ட ஓர் அழகான மூக்கு இருக்கும். என்னுடைய மூக்கு இரும்பினால் செய்யப்பட்டிருக்கும்.

கீழ்ப் பகுதியின் மூக்கைச் சுழலிடமாகக் கொண்டு மேற்பகுதியைச் சுற்றுவதற்கு வசதியாக மேற்பாகத்தின் விளிம்புக்கு அருகில் இன்னொரு மூக்கு பொருத்தப்பட்டிருக்கும். என்னுடைய கீழ்ப்பகுதியும் மேற்பகுதியும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கிய நிலையில் மேற்பகுதியின் துளைக்குள் உடைக்க வேண்டிய என்னுடைய நண்பர்களை போட்டுக் கைப்பிடியினால் மேற்பகுதியைச் சுழற்றுவார்கள்.

என் நண்பர்கள் சிறிது சிறிதாக இரண்டு முகங்களுக்கும் இடையே சென்று உடைக்கப்பட்டு வெளி விளிம்பினூடாக வெளிவருவார்கள். இவ்வாறு வெளியேறும் என் நண்பர்களை கொண்டுதான் என் மற்றொரு நண்பன் பெயர் பருப்பு வருவான். கண்டுப்பிடித்து விட்டீர்களா நான் யாரேன்று…

சின்னதாயி… முருகம்மா… கருப்பாயி என்ன ஞாமகம் இருக்கா? நான்தான் இயந்திர கல் பேசுகிறேன். அன்றைய காலத்தில் உரல் சத்தமும் இயந்திர கல்லின் அரவை சத்தமும்தான் தீபாவளி குதூகலத்தை தொடக்கி வைக்கும்.  

உங்களோட கதைக்கு நானு ஊறுகாயா இருந்தேனே. முனியம்மா வீட்டு கதையில தொடங்கி செல்லம்மா வீட்டு கதை வரைக்கோ பேசுவீங்களே என்ன வெச்சுட்டு. நானும் உங்களோடு அந்த கதையெல்லா கேட்டுகிட்டே என்னுடைய உடைக்கிற வேலையை செய்வேனே.

அன்னைக்கு உங்களுக்குப் பிடிக்காதவ என்ன பயன்படுத்த வந்துட்டா போதும் உடனே சாட மாட பேச்சு பேசுவீங்க. அவ இப்படி இவ இப்படினு. பிறகு என்ன சண்டைதா. ஊரே வேடிக்க பாக்குறதக்கூட கண்டுக்காம என்ன நடுவுல வைச்சு அப்படி சண்ட போடுவீங்க. அப்ப உங்க கதைலா கொஞ்சம் வெளியாகும். எஸ்டேட் மக்களின் வாயிற்கு அவுல்தான். உங்க சண்டையைத் தீர்க்க வீட்டுக்கார முதலாளி நடுவரா இருந்து பிரச்னையைச் சமாளிப்பாரு. நிலைம மீறினால் என் முதலாளி என்ன அல்லேக்கா சைக்கிள்ல தூக்கிகிட்டு போய்ருவாரு.

அந்த அளவுக்கு உங்க அட்டகாசத்தைத் தாங்க முடியாது. அந்த 1 மாத காலத்துல என்னோட வீட்டுக்கார முதலாளிக்கு உங்கள சமாளிக்கிற வேலதான் அதிகமா இருக்கும் போ. என்னோட பயன்பாடு குறைவாக இருக்கும் காரணத்தினால் ஓர் ஊருக்கு நானும், என்னுடைய 2 அல்லது 3 சகோதரர்கள் மட்டும்தா இருப்போம். அதனாலதான் இவ்வளவு பிரச்னை.

அதிலும் தீபாவளிக்குக் கல்லு உருண்டை, எள்ளு உருண்டை, சத்து உருண்டை செய்வதுக்கு என்ன உருட்டி எடுப்பீங்களே. அசதி இருக்கும். இருந்தாலும் களைப்பை மறந்து உங்களுக்குப் பணியாற்றுவது சற்று சுகமாகவே இருக்கும் என்று சொல்லலாம்.

என்னை பயன்படுத்தி கல் உருண்டை செய்த காலத்தை மறக்கவா முடியும். இன்று நினைத்தால் கூட கண்முன் வந்து செல்கிறது. பல் உறுதியை மருத்துவமனைக்குப் போகாமலேயே என்னால் செய்யப்பட்ட கல் உருண்டை வைத்து பரிசோதித்துக் கொள்வீர்கள். அந்த அளவுக்குப் பேருக்கு ஏற்றது போல இருக்கும் கல்லு உருண்டை.

நிலக்கடலை 500 கிராம், பாகு வெல்லம், நெய் தேவையான அளவு தயார் செய்த பிறகு நன்கு குளித்து சுத்தமாக காட்சியளிக்கும் என்னுள் நிலக்கடலையைப் போட்டு நன்கு சுழற்றுவீர்கள்.

உங்களுடைய ஒவ்வொரு கைப் பருமனையும் பார்த்து நானே மிரண்டது உண்டு. சும்மா சொல்லக்கூடாது. காலையில பிரட்டுக்குப் போவீங்க. பிறகு, திரும்ப வீட்டுக்கு வந்துட்டு காபியோ டீயோ கொஞ்சம் குடிச்சுட்டு. வீட்டுல இருக்குற ஏதாவது சாப்டுட்டு பால்மரம் வெட்டவோ, செம்பனை தோட்டத்திற்கோ, வெளிகாட்டு வேலைக்கோ செல்லுவீங்க. மாடா உழைச்சு ஓடாய் தேய்ந்து சாயந்திரம் 3 மணிக்கு வீட்டுக்கு வருவீங்க. பிள்ள குட்டிங்களா பார்த்துக்கனோ, சமைக்கனோ. இதற்கு மத்தியில் இந்த தீபாவளி வேற.

ம்ம்ம்… நம்ப வேலைய பார்ப்போம். மூலப் பொருட்கள அதன் உருவமே அடையாளம் தெரியாதப்படி சுழற்றிய பின் ஒரு தாம்பலத்தட்டில் எடுத்து மாற்றி நன்கு காச்சிய பாகுவை சுட சுட இடித்து மாவாக்கிய நிலக்கடலை நடுவில் ஊற்றி கை சுடாமல் இருக்க பதமாக உருண்டை பிடிப்பீர்கள். வேலை செய்து களைப்பாக இருக்கும் எனக்கு அதனை பார்க்கும் போது எடுத்து சுவைக்க மனம் ஏங்கும். பின் அந்த உருண்டைகளை ஒரு காலி போத்தலில் போட்டு தீபாவளி வரும் வரை காத்திருப்பீர்கள். அதற்குள்ள சில வாண்டுங்க டப்பா மூடிய கழற்றி அந்த கல்லு உருண்டையைப் பதம் பார்ப்பது உண்டு. அந்த அளவிற்கு கல்லு உருண்டை இல்லாத தீபாவளியா என்ன.

ஒரு அத்தியாவசிய பொருளாக இருந்த என்னைப் பயன்படுத்தி செய்யப்பட்ட கல் உருண்டை பெண்களின் கைப்பயிற்சிக்கும் நான் பெரிய பங்காக இருந்திருக்கிறேன் என்று நினைத்து பார்த்தால் சற்று மகிழ்ச்சிதான்.

அதுமட்டுமல்லாமல், சண்டை போட்டு பல மாதங்களாக பேசாமால் இருக்கோ தோட்டத்துப் பெண்கள் என்னை ஒரு சாக்காக வைத்து மீண்டும் ஒன்று சேர்வார்கள். பார்பதற்கும் பொறாமையாகதான் இருக்கோ ஆனால் வேடிக்கையாகவும் இருக்கும்.

என் உடன்பிறப்புகள் தோட்டங்களில் குறைவாகவே இருந்த காரணத்தினால் தோட்டப்புற மக்கள் தீபாவளி காலங்களில் உருண்டைகளை வித விதமாக செய்வதற்கு அதிக நேரம் என்னை பயன்படுத்த வேண்டும் என்பதால் சண்டைகளை மறந்து சமாதானம் ஆகி கொள்வார்கள். ஒருநாளில் பேச்சுமுத்து வீட்டில் மறுநாள் பார்வதி வீட்டில் என்று நல்லா ஊர் சுற்றிய காலம் அது. அந்தமாதிரி காலம் திரும்ப வருமா. அது ஒரு பொற்காலம்.

காலப்போக்குல மக்களிடையே நவீன வாழ்க்கை அதிகரித்த நிலையில் எனக்கும் என்னுடைய எதிரிகள் அதிகமாகிவிட்டன. நவீனம் என்ற பெயரில் புது புது சாதனங்கள் வந்துருச்சு. என்னைய ஓரங்கட்ட தொடங்கிட்டாங்க. சொல்வதைவிட கல் உருண்டைய மறந்துட்டாங்க, இந்த கல்லாய் போன மனிதர்கள்.

எப்படி இருந்தாலும் என்னோடு போட்டியிட முடியாது அவர்கள். கருங்கல்லினால் செய்த நான் எங்கே இரும்பு, பிளாஸ்டிக்கினால் பிறந்து வாழும் அவர்கள் எங்கே. ஆனால், அவசர வாழ்க்கையில் மக்கள் என்னுடைய எதிரியைதான் அதிகம் விரும்புகிறார்கள்.

எனக்கும் வயதாகிவிட்டது. தோற்றமும் செழிப்பு இழந்துவிட்டது. என்னுடைய தலைமுறையும் அழிந்து கொண்டே வருகிறது. சொல்வதற்கு வருத்தம்தான். என்ன செய்ய முடியும் என்னால் மட்டும்.

வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் இன்னும் சில ஊரில் சில வீடுகளில்  நான் வாழ்ந்து கொண்டுதான் வருகிறேன். என்னதான் நவீன இயந்திரங்கள் இருந்தாலும் கையால் அரைப்பதைபோல வராது. ஒருகாலத்தில் உங்களுக்கு நான் அளித்த விசுவாசத்திற்காவது ஒவ்வொரு தீபாவளிக்கும் என்னால் செய்யப்பட்ட கல் உருண்டைகளை வீட்டில் ஒரு பத்தாவது வையுங்கள். பிறகு மற்ற இனத்தவர்கள் எடுத்து கல் உருண்டையை உறவாடினால் சண்டைக்கு போய் நிற்காதீர்கள்.

தலைமுறை தலைமுறையாக உங்கள் முன்னோர்கள் பாதுகாத்து வந்த என்னையும் என்னால் உருவாக்கப்படும் கல் உருண்டையையும் மறந்து தவற விட்டுவிடாதீர்கள். இனி வரும் தலைமுறையினருக்கும் நான் பயனாக இருக்க வேண்டும். உங்களுக்கும் வாய்ப்பு கிடைத்தால் என்னை ஒருமுறை வந்து பார்த்துச் செல்லுங்கள். இந்த வேளையில் என்னுடைய குடும்பத்தினர் சார்ப்பாக தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.

WATCH OUR LATEST NEWS