”பூன வெடி, ஆம வெடி மாதிரி இல்லாமா நல்லா பெருசா சத்தமா கேக்குற ஒரு யானை வெடிய கொடுங்க சாரு” என்ற குரல் கேட்க ”உருவத்துல சிறுசா இருந்துட்டு இவனுக்கு யானை வெடி கேக்குது” என்று நினைத்துக் கொண்டே ”இந்தாப்பா நீ கேட்ட யானை வெடி” என்று கடை முதலாளி அந்த யானை வெடியை தீபனிடம் நீட்டினார்.
தான் எடுத்து வந்த உண்டியலில் உள்ள சில்லறையை எடுத்து கொட்டி யானை வெடியை தூக்கிக் கொண்டு ஓடினான் தீபன். ”டேய் மச்சா… நாளைக்கு ஏரியாவுல நம்ப வெடிதா கேக்குணோ. யாரையோ தூங்க விட்டுற கூடாது புரிதா?” என்று சொல்ல அவனின் இரண்டு நண்பர்களும் அதற்கு ஆமோதித்தனர்.
”சும்மாவே இவனுங்க ஆர்ப்பாட்டம் பண்ணுவானுங்க இதுல என்ன வாங்கிட்டு போய் என்ன என்ன பண்ண போறானுங்களோ. இப்பவே கண்ண கட்டுதே” என்ற யானை வெடியின் மன குமறல் ஒரு புறம் இருக்க வீட்டை வந்தடைந்தனர் அம்மூவரும்.
வாங்கி வந்த யானை வெடியை வீட்டில் யாருக்கும் தெரியாமல் ஸ்டோர் அறையில் தூக்கி போட்டான் தீபன். அந்த யானை வெடிதான் பின்னாலில் அவனுக்கே வெடியாக மாறப்போகிறது என்பதை அவன் உணர்ந்திருக்க மாட்டான்.
தீபாவளிக்கு ஒரு மாதம் இருக்கும் போதே அனைவரும் வித விதமான பலகாரங்கள், புத்தாடை வாங்கி வைத்தல், வீட்டை அலங்கரிப்பது போன்ற வேலைகளில் சற்றும் ஓய்வின்றி இருக்கும் வேளையில் தீபனும் அவனின் உயிர் நண்பர்களாகிய கிருஷ்ணா மற்றும் கௌஷன் யார் வீட்டின் முன் வெடி வைத்து பதறவிடுவது போன்ற வேலைகளில் மும்முரமாக செயல்பட்டு வருவார்கள்.
அதே மாதிரிதான் இவ்வாண்டும். அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தீபாவளிக்கு தேவையான உபயோக பொருட்களை வாங்க சிறுக சிறுக சேர்த்து வைத்திருந்த அவன் அம்மாவின் பணத்தை உண்டியலில் இருந்து எடுத்து கொண்டு வெடி கடைக்கு ஓடினான்.
“இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டன் ஒருநாள் நல்லா பட்டதான் புத்தி வரும்” என்று அடிக்கடி தீபனின் தாயார் கூறுவதும் உண்டு. ஆனால், அந்த சொல் அடிக்கடி கேட்கும் வார்த்தை அல்லவா தீபனுக்கும் அது பழகிவிட்டது.
அன்று தீபாவளி. காலையில் எழுந்து வேண்டாம் வேண்டாம் என்று தீபன் கூறினாலும் அவனின் தயார் சீயக்காய் வைத்து குளிக்க வைத்து சுட சுட ஆவி பறக்க இட்லி, தோசை சுட்டு அவனை சாப்பிட வைத்து அழகு பார்த்தார்.
அவனின் தலையைக் கோதி இன்னைக்காவது எந்த சேட்டையும் செய்யாமல் வாலை சுருட்டி வை என்று சொல்லி முடிப்பதற்குள் அவனின் இரண்டு நண்பர்களும் தீபனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். “ஹெப்பி தீபாவளி ஆண்டி” என்று கூற “வாங்க நீங்களும் இவனுடன் சேர்ந்து சுட சுட இட்லி சாப்பிடுங்க” என்று தீபனின் தாயார் அவர்களை வரவேற்றார்.
காலை உணவு சுமூகமாக முடிவுற்றது. “அடுத்து என்ன, வெடிதான மச்சா?” என்று கிருஷ்ணா கேட்க ஸ்டோர் அறையில் தூக்கி போட்ட யானை வெடியை வெளியே எடுத்து வந்தான். தாமான் மக்களை அலறவிடுவதற்கு அவ்வளவு ஆர்வம் இவர்களுக்கு. அம்மாவின் சொல்லை சற்றும் பொருட்படுத்தாமல் வழக்கம் போல வெடி வெடிக்க இடத்தை தேடி வெளியே நோட்டமிட்டனர்.
“டேய் தீபன் நம்ப ஏன் பக்கத்து தாமான்ல போய் வெடி வெடிக்க கூடாது. எப்போதும் இங்கதான வெடி வெடிச்சுட்டு இருக்கோ. புதுசா ஒரு சேஞ்சுக்குப் பக்கத்து தாமான் போகுலாமே” என்று கௌஷன் கூறினான். ”நீ சொல்றதும் செரிதாண்டா. வா போவோம்” என்று பக்கத்து தாமானுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார்கள்.
வழக்கம் போல ஊர்வம்பை இழுக்க யார் வீட்டின் முன் வெடி வைப்பது என்று திட்டம் கூட. அதிலில் ஒருவன் ”டேய் கிளாசுல நம்ப எதிரி டோணி வீட்டு முன்னுக்கு வெடிப்போமா. ரொம்ப நாள் ஆசையோ கூட” என்று சொல்லி மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்த யானை வெடியை எடுத்து டோணி வீட்டின் முன் போட்டான் கிருஷ்ணா.
யானை வெடியை முன்பின் பயன்படுத்தியது இல்லை. எப்படி கொளுத்துவதும் என்று தெரியாமல் மூவரும் முழித்தனர். இன்னும் சத்தம் அதிகமாக கேட்க வேண்டும் என்பதற்காக தீபன் ஒரு காலி டின்னை எடுத்து வந்தான்.
யானை வெடியை அதனுள் போட்டான். வெடியின் மீது நெருப்பு வைத்ததும் ”டமார்” என்ற ஒரு பயங்கர சத்தம். அந்த பயங்கர சத்தத்தைக் கேட்டு டோணியும் அவனின் பெற்றோர்களும் வெளியே வந்தனர். அவ்வளவு பயங்கரமான சத்தம் போல. ”என்னப்பா பட்டாசு வெடிக்கிறீங்க அந்த பக்கமா போய் வெடிக்கலாம்ல. எதற்கு எங்க வீட்டு வாசப்படி வர வெடியை தூக்கி போடுறீங்க” என்று சற்று சாந்தமாக கேட்டார்.
அவர் கூறியதைச் சற்றும் கண்டுக் கொள்ளாமல் மாறி மாறி யானை வெடியை அவர்களின் வீட்டு முன் தூக்கி எறிந்து கூச்சளிட்டனர். பலமுறை எடுத்துச் சொல்லியும் மூவருடைய சேட்டை அதிகரித்ததே தவிர குறையவில்லை. ”தன் மேல் உள்ள வெறுப்பில்தான் இவர்கள் இந்தமாதிரி செய்கிறார்கள். விடுங்க அம்மா” என்று டோணி கூறியும் அவனின் அம்மா அமைதியாகவில்லை.
பலமுறை எடுத்துக் கூறியும் தீபனும் அவனின் நண்பர்களும் கேட்காததால் கோபமடைந்து டோணியின் அம்மா, காவல்துறையை தொடர்பு கொண்டு இதுக்குறித்துப் புகார் செய்தார். தொடர்பு கொண்ட அரை மணி நேரத்திற்குள் காவல்துறையினர் அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இந்த செய்தி தெரிந்து தீபன், கௌஷன் மற்றும் கிருஷ்ணாவின் பெற்றோர்களும் அங்கு வந்தனர். டோணி வீட்டின் உள்வரை யானை வெடியின் சிதறல்கள் கொட்டி கிடப்பதையும் அவர்கள் கண்டனர். மேல் விசாரணைக்காக அம்மூவரையும் காவல்துறையினர் கைவிலங்கு மாட்டி காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
நல்ல நாளின் போது தன் கைகளில் விலங்கு மாட்டி காவல் துறைக்கு அழைத்து செல்லும் ஆவேசத்தில் தீபன் ”என்னோட கையில விலங்கு மாட்ட வைச்சுட்டல. அடுத்த தீபாவளிக்கு உன்னோட வீட்டில ஒரு உயிரு போகும் பாரு” என்று டோணியின் குடும்பத்தை பார்த்துக் கூறிச் சென்றான். அவன் அன்று அப்படி கூறியது யாருக்கும் பெரியதாகபடவில்லை.
சரியாக ஒரு வருடம் கடந்தோடியது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு மாதங்களே எஞ்சியிருந்தன. என்னைக்கும் இல்லாமல் அன்று மட்டும் ”டேய் மன்னிச்சிடுடா… அன்னைக்கு நாங்க செஞ்ச தப்புக்கு எங்களுக்கு நல்லா தண்டனை கிடைச்சிருச்சு. இனிமேல் எல்லாத்தையோ மறந்துட்டு நம்ப எல்லா பழையபடி பழகுவோ. உங்க அம்மா அப்பாக்கிட்டையோ அப்புறோ மன்னிப்பு கேட்கறோம்” என்று கூறியதும் டோணியும் நடந்த அனைத்து சம்பவங்களையும் மன்னித்துவிட்டான்.
அன்று இரவு 8 மணி. தீபன், கௌஷன், கிருஷ்ணா மற்றும் டோணி வெகு நாட்களுக்கு பிறகு வெளியில் சுற்ற காரில் புறப்பட்டனர்.
செல்லும் வழியில் அந்த கார் ஓர் இருட்டு பாதையை நோக்கிச் சென்றது. ”எங்கடா போறீங்க” என்று டோணி கேட்டும் பதில் வரவில்லை. கார் சற்றென்று நின்றது. தர தர வென டோணியைக் காரில் இருந்து வெளியாக்கினர். ”என்னடா பண்றீங்க” என்று கேட்டு முடிப்பதற்குள் டோணியை உடன் கொண்டு வந்த கத்தியினால் சரமாரியாக அங்கேயே வெட்டினர்.
”அதா அன்னைக்கே சொன்னல இந்த தீபாவளிக்கு உங்க வீட்டுல ஓர் உயிர் போகும்னு. அது உன்னோடதா. எங்களையா உங்க அம்மா போலிஸுல மாட்டிவிட்டாங்க. இனிமேல் உங்க வீட்டுல யாரும் நிம்மதியா இருக்க மாட்டாங்க. போய் சேரு.” என்று கூறிவிட்டு அவ்விடத்தை விட்டு தலைமறைவாகினர்.
சில நாட்களுக்கு பிறகு காவல்துறைக்குத் தகவல் தெரிந்து அவ்விடத்தைச் சென்று பார்த்தபோது அங்கு டோணியின் உடல் கிடந்தது. விசாரணைக்குப் பிறகு இம்மூவர்களையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
பூனை வெடி, யானை வெடியாக மாறி தற்போது தங்கள் வாழ்க்கைகே வெடி வைத்திருப்பதை அறிந்து அம்மூவரும் வருந்தினர்.