உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் மிக கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் அடங்கும். அதிலும் தீவு பகுதிகளில் குடிப்பெயர்ந்து சென்றிருக்கும் தீவுவாசிகள் கொண்டாடும் தீபாவளி எப்போதும் தனிச் சிறப்பையே வழங்கும். இனம், மதம், பேதம், அந்தஸ்த்து இன்றி அனைத்து திருநாளையும் ஒன்றிணைந்து கொண்டாடப்படும் பல நாடுகளில் அந்தமான் நிகோபார் தீவும் உள்ளடங்கும்.
அந்தமானில் வங்காளம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய மக்கள் தவறாமல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையைக் குடும்பத்துடன் சிறப்பான முறையில் கொண்டாடி வருவதைக் கண்கூடாகப் பார்க்க முடியும். இந்தியாவை சேர்ந்த சுமார் ஏழு யூனியன் பிரதேசங்களில் ஒன்றான அந்தமான் நிகோபார் தீவு சென்னையிலிருந்து 1450 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடலில் அமைந்திருக்கிறது.
டர்க்கைஸ் கடற்கரைகள், மனதைக் கவரும் நீர்வாழ் உயிரினங்கள், ரம்மியான மழைக்காடுகள், நினைவுச்சின்னங்கள், பச்சை பசேலென்ற தாவரங்கள், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் என்று அந்தமான் நிகோபார் ஓர் அழகான தீவாக வீற்றிருக்கும்.
நிகோபாரில் அமைந்துள்ள 22 தீவுகளில் ஏறக்குறைய 10 தீவுகளில் மக்கள் குடியிருந்து வருகின்றதை வரலாறு கூறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் தீபாவளி திருநாள் அத்தீவையே பிரமிக்க வைக்கும் அளவிற்கு வண்ண வண்ண விளக்குகளால் அழகாய் ஒளித்திடச் செய்திடும்.
இலட்சக்கணக்கானத் தீபங்கள், இனிப்புகள், பூஜைகள், குறைந்த அளவிலேயே பட்டாசு வெடிப்புகள், புத்தாடைகள் என்று அந்தமான் தீவே அதிரும்படி தீவுவாசிகள் இத்திருநாளை விமரிசையாக கொண்டாடிவிடுவர்.
அந்நன்நாளை நிகோபார் தீவுவாசிகள் தீபங்களின் திருவிழா என்றுக்கூட சொல்லுவார்கள். அதற்கு ஈடாக செழிப்பு, மகிழ்ச்சி, அமைதி, மற்றும் அறிவு போன்றவற்றின் அடையாளமாக அந்த நகரத்தைப் பல்லாயிரக்கணக்கான வண்ண விளக்குகளால் அலங்கரிப்பது வழக்கமாகும்.
அதோடு, மாலை நேரங்களில் வீடுகள் மெழுகுவர்த்திகளாலும், தொடர் விளக்குகளாலும் ஒளிக்கப் பெற்று இரவு நேரத்தில் அந்த தீவைப் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாகவும் பரவசமாகவும் காட்சி அளிக்கும்.
தீவுவாசிகள் தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பே அனைத்து பணிகளையும் தொடங்கிவிடுவர். குடும்பத்துடன் ஒன்றாக பலவித சுவையான பலகாரங்கள் செய்வது, புத்தாடைகள் வாங்கி சேர்ப்பது, எப்படி எப்படியெல்லாம் தீபாவளியைக் கொண்டாடலாம் என்கிற ஆழ்ந்த எண்ணங்களில் மூழ்கிவிடுவர்.
அதோடு அண்டை அயலாரிடம் ஒன்று சேர்ந்து தம் வீட்டில் தீபாவளிக்கு நடந்துக் கொண்டிருக்கும் முன் ஏற்பாடுகளை பேசி பெருமிதம் கொள்வது என அடுக்கிக் கொண்டே போகலாம்.
தீபாவளி மாதம் வந்துவிட்டாலே அந்தமான் மார்க்கெட்டிற்கும் தீபாவளி வந்துவிட்டது என்று சொல்லியாக வேண்டும். ஒன்று அல்ல இரண்டு அல்ல. அந்த தீவு முழுவதுமே ஆங்காங்கே பல விதமான கடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இனிப்பு பலகாரங்கள், பட்டாசுகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அணியக்கூடிய புத்தாடைகள், வீட்டிற்கு தேவையான உபயோகப் பொருட்கள், இறைச்சிகள் போன்றவை ஒரே இடத்தில் கிடைப்பதால் அவ்விடமே மக்கள் கூட்டமாக காணப்படும். மற்ற தீவுகளிலிருந்தும் தீபாவளிக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கே மக்கள் இங்கு வருவது உண்டு.
கணிசமான பொருட்களின் விலை, தரமான பொருட்கள், வாடிக்கையாளர்களிடம் வியாபாரிகள் அணுகும்முறையே பெரும்பாலான மக்கள் நிகோபார் தீவில் வந்து பொருட்களை வாங்க செய்கிறன. தெற்கு மற்றும் வடக்கு உணவுகளின் கணிசமான சேகரிப்பு அந்தமான் தீவுகளில்தான் இருக்கிறது என்று நம்மால் உணர முடியும்.
அந்தமான் தீவுவாசிகள் பெரும்பாலும் கைவினைப் பொருட்களை கொண்டு தீபாவளிக்கு தங்களின் வீட்டை அலங்கரிப்பது ஒரு வழக்க முறையாக கொண்டிருக்கின்றனர். வீண்செலவினைக் குறைப்பதற்கும் ஆடம்பர செலவினை தவிர்ப்பதற்கும் இத்தகைய கைவினைப் பொருட்களை கொண்டு தீபாவளியின் போது வீட்டை அலங்கரிப்பர். ஆரவாரமின்றி கொண்டாடப்படும் பண்டிகைதான் சிறந்தது என்பது அவர்களின் ஐதீகம்.
தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு, புத்தாடைகளை அணிந்து மூத்தோர்களை வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக் கொள்வதுதான் முறை. முதலில் இனிப்புடன் தொடங்குவதற்கு தங்களின் அன்பானவர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் வீட்டில் செய்த பலகாரங்களைப் பகிர்ந்து கொண்டு மகிழ்ச்சியுடன் தீபாவளியின் முதல் நாளை தொடங்கி வைப்பர்.
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது பாகுபாடின்றி தீபாவளியன்று குறைந்த அளவிலேயே பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவது, அந்த தீவை காற்று தூய்மைக்கேட்டிலிருந்து பாதுகாக்கும் முறையே என்று உறுதியாக இருந்து செயல்ப்பட்டு வருகின்றனர்.
அதோடு பட்டாசுகள் அந்தமான் தீவுகளுக்கு இறக்குமதி செய்வது மற்ற நாடுகளை காட்டிலும் சற்று விலை அதிகம் என்பதால் அத்தீவில் வசிப்போர் பெரும்பாலும் பட்டாசுகளை வாங்குவது இல்லை; அதை விரும்புவதும் இல்லை. அதுவும் சரிதான்.
தீபாவளிக்குப் பட்டாசுகளை வாங்குவதற்கே லட்சக்கணக்கில் செலவிட்டு; ஊரே கிடுகிடுக்கும் அளவில் வெடித்து தீர்க்கும் மக்கள் மத்தியில் இத்தகைய சிந்தனை சிறந்தவையே எனக் கூறலாம்.
இறைவழிப்பாட்டிற்கு பிறகு, இட்லி, வடை, தோசை என்று வீட்டிற்கு வருபவர்களை தடப்புடலான விருந்து வைத்து அசத்தியும் விடுவர். தமிழகத்தின் உணவு சுவையைப் போன்று இங்கும் கிடைப்பதால் சென்னையிலிருந்து அந்தமான் தீவிற்கு தீபாவளி பெருநாட்களில் மக்கள் வந்து செல்வது உண்டு. அதுமட்டுமில்லாமல், பஞ்சாபி, ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி போன்ற பல்வேறு வட இந்திய உணவு வகைகள் அந்தமான் சுவையான உணவுகளின் மறுபக்கம் என்றும் கூறலாம்.
அதன்பின், அருகில் இருக்கும் உறவினர் வீடு அல்லது அண்டை அயலார் வீடுகளுக்குச் சென்று தீபாவளியை அந்த தீவிலேயே முடித்துக் கொள்வர். ஆடம்பரமின்றி கொண்டாடப்படும் அந்தமான் நிகோபாரில் ஒருமுறை நீங்களும் வந்து தீபாவளி திருநாளை கொண்டாடி பாருங்களேன்.