தீபாவளிக்குச் சைவமா அல்லது அசைவமா?

பண்டிகை மற்றும் விழாக்கள் வந்தால் போதும் நாம் சாப்பிடும் அளவிற்கு அளவே இருக்காது. நமக்குப் பிடித்த உணவுகளையும் இனிப்புகளையும் கண் முன் வைத்தால் எப்படி சாப்பிடாமல் இருக்க முடியும். அதுவும் தீபாவளி திருநாள் என்றால் சொல்லவா வேண்டும்.

தீபாவளி பண்டிகை என்றாலே இந்துக்களுக்குக் குதூகலம்தான். அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய், சீயக்காய் வைத்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, வித விதமான பலகாரங்களை ஒரு கை பார்ப்பதுதான்.

தீபாவளியின் முதல் நாளே சந்தைக்குச் சென்று ஒரு வாரத்திற்குத் தேவையான ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி வாங்கி வைத்து விடுவர். இறைச்சி கடைகளில்தான் கூட்டம் அதிகமாக இருக்கும் என்று கூட சொல்லலாம்.

தீபாவளியின்போது வியாபாரிகள் லாபம் ஈட்டும் பொருட்டு இறைச்சி விலைகள் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் அதைத் தவறாமல் வாங்கிச் செல்வது வழக்கம். தீபாவளி திருநாளில் இறைச்சி இல்லையென்றால் எப்படி என்றுகூட ஒரு சிலரின் கருத்தாக இருக்கும்.

தீபாவளிக்கு முதல் நாள் முன்னோர்களுக்குப் படைக்கப்படும் படையலைச் சிலர் அசைவமாகச் செய்து வைப்பது உண்டு. தீபாவளி ஒரு வாரம் முழுவதும் அசைவமாகவே மூன்று வேளைகளிலும் வித விதமாகச் சமையல் செய்து சாப்பிடுவார்கள்.

வீட்டிற்கு உறவினர்கள் வரும்போதும் பல வகையான அசைவ உணவுகளைச் சமைத்து கொடுத்து தீபாவளியோடு சேர்த்து கோழி இறைச்சியையும், ஆட்டிறைச்சியையும் சுவைப்பர்.

ஆவி பறக்க சுட சுட இட்லி, தோசைகளோடு இதனைச் சாப்பிடும்போது வேறு என்ன மேலும் கேட்க தோன்றும். தீபாவளி என்றாலே அசைவம்தான் என்று கூறும் தரப்பு ஒருபுறம் இருக்க அந்நாளில் சைவம்தான் எடுப்பது இறைவனுக்குச் செலுத்தும் காணிக்கை என்றும் சிலர் கூறுகிறார்கள்.

தீபாவளி அன்று தெய்வங்கள் வீட்டிற்கு வருவதுண்டு என்று சொல்லும் புராணம் வழி அந்த நாளில் அசைவ உணவைத் தவிர்ப்பார்கள். பொதுவாகவே சில திதிகள் வரும் நாள்களில் அசைவம் சாப்பிடக்கூடாது என்பர்.

சதுர்த்தி, ஏகாதசி, தமிழ்ப் புத்தாண்டு, திருக்கார்த்திகை, தைப்பொங்கல், அட்சய திருதியை, தீபாவளி ஆகிய நாள்களில் அசைவ உணவைத் தவிர்த்து தெய்வ வழிபாட்டில் முழு ஈடுபாட்டினையும் செலுத்துவர். தீபாவளி பெரும்பாலும் அமாவாசை அன்று வருவதால் சுத்தமாகக் குளித்துவிட்டு முன்னோர்களுக்குச் செய்ய வேண்டிய தர்ப்பணங்களைத் தவறாமல் செய்து வழிபடுவது உண்டு.

தீபாவளிக்கு முதல் நாள் அல்லது தீபாவளி அன்று முன்னோர்களுக்குப் படையல் படைக்கும்போது சைவமாகச் சமைத்து வைப்பர். இறைச்சிகள் வாங்கும் செலவும் அங்கு அவசியமில்லை.  உடலுக்குச் சத்தான காய்கறிகள், பழங்கள் என்று மாமிச உணவுகள் இல்லாமல் சமைத்து சாப்பிடுவார்கள்.

சைவ உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் இதய நோய், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளிலிருந்து தன்னையும் தங்களின் நலனையும் பாதுகாக்க சைவமாகச் சாப்பிடுவர்.

தீபாவளி நாள்களில் இறைச்சிகள் சாப்பிடுவதால் ஏற்படும் அதிக ஆபத்தான விளைவுகளிலிருந்து இந்தச் சைவ உணவு பாதுகாப்பதால் பெரும்பாலோர் தீபாவளியன்று சைவமாகச் சமைத்து சாப்பிடுகிறார்கள்.

சில வீடுகளில் தீபாவளி நாளன்று விரதம் எடுக்கும் பழக்கமும் இருந்து வருகிறது. அவரவர் குடும்ப வழக்கப்படி பாரம்பரியமாகப் பின்பற்றி வரக்கூடிய ஒரு விஷயமாகும்.

தீபாவளி தினத்தன்று, அதாவது ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்படும் இந்தக் கேதார கௌரி விரதம் சிவபெருமானை நினைத்து இருக்கக்கூடிய விரதமாகச் சொல்லப்பட்டுள்ளது.

கணவனும் மனைவியும் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்காக விரதம் இருந்து, ‘சிவனில் பாதி பார்வதி தேவி’ என்ற வரத்தினைப் பெற்ற நாளாக இந்த ஐப்பசி மாத அமாவாசை நாளன்று விரதம் எடுக்கிறார்கள் சிலர்.

சூரியன், சந்திரன் ஆகியவற்றில் இருந்துவரும் அதிகமான ஈர்ப்புத் தன்மை காரணமாக நமது உடலில், செரிமானத்தில் ஒரு வகை பாதிப்பை ஏற்படுத்துகிறது.

செரிமானத்தன்மை அந்த நாளில் குறைவாக இருப்பதால் அமாவாசையன்று விரதம் மேற்கொள்வது நல்லது என்று நமது முன்னோர்கள் கண்டுள்ளார்கள். முன்னோர்களுக்குச் செலுத்தும் ஒரு நன்றிக்கடனாகத் தீபாவளி அன்று ஒரு சிலர் விரதம் எடுக்கின்றனர்.

சித்த வைத்தியர்களாக இருப்பவர்கள் தீபாவளி அமாவாசையன்று ஜீவராசிகளைத் துன்புறுத்தி சாப்பிடுவதில் ஆர்வம் செலுத்தமாட்டார்கள். சித்த வைத்தியத்தைப் பொறுத்தவரை அமாவாசையன்று மூலிகை சேகரித்தல், பதப்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுப்பர்.

அசைவம், சைவம் மற்றும் விரதமிருந்து தீபாவளி பண்டிகை கொண்டாடுவது அவரவர் காலங்காலமாகப் பின்பற்றி வரும் நடைமுறையாகும்.  இதில் சரி அல்லது தவறு என்று எதுவும் கிடையாது.

WATCH OUR LATEST NEWS