எமனுக்குப் பிடித்த தீபாவளி

வட இந்தியாவில் தீபாவளி திருநாள் ஐந்து நாள் பண்டிகையாக மிக விமரிசையாக கொண்டாடப்படும். தீபாவளி பண்டிகை மகாளய பட்ச அமாவாசை அன்று வருவதால் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது கால காலமாக பின்பற்றி வரும் பழக்க முறையாகும்.

இந்த நாட்களில்தான் பித்ரு லோகத்தில் இருக்கும் முன்னோர்கள் பூமிக்கு வருவார்கள் என்பது நம்பிக்கை. அப்படி பூமிக்கு வருபவர்கள் தீபாவளி நாட்களில்தான் மீண்டும் பித்ருலோகத்திற்கு திரும்புகின்றனர். அவர்களை வழியனுப்பும் பொருட்டு தீபாவளிக்கு முதல் நாளான திரயோதசி திதியன்று மாலை நேரத்தில் எம தீபம் ஏற்றுகிறார்கள்.

எம தீபத்தை உயரமான இடத்தில் ஏற்றுவதுதான் சிறந்தது என்பது வழக்கமாகும். அதுவே வசதியற்றவர்கள் ஸ்வாமிக்கு விளக்கேற்றும்போது தனியே ஒரு விளக்கு ஏற்றி வழிப்படுகின்றனர். இதனால் முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவதாக கூறுகின்றனர். இந்த நாளில் வீட்டின் வெளிப்புறங்களில் விளக்குகள் ஏற்றி வைத்து, அதிகாலையில் எழுந்து நீராடி, புத்தாடைகள் அணிந்து தங்கள் குல வழக்கப்படி பூஜைகளை செய்வர்.

சில இடங்களில் இந்நாளை விரத நாளாகவும் கருதி நாள் முழுதும் உண்ணாமல் இறைவழிப்பாட்டில் மூழ்கி இருப்பர். 3 ஆம் நாள் ஶ்ரீவிநாயகர், சரஸ்வதி மற்றும் மகாலட்சுமி ஆகியோருக்கு சிறப்பு வழிப்படுகளும் நடைபெறும். வியாபாரம் செய்யும் வணிகர்களும் புதுக் கணக்கினையும் எழுதுவர்.

4 ஆம் நாள் இந்திரன் பெய்வித்த பேய்மழையில் இருந்து கோகுலவாசிகளை, பகவான் கிருஷ்ணர் காப்பாற்றிய திருநாளாக கருதப்படுகிறது. சிலர் இந்த நன்நாளை புதுவருடப் பிறப்பாகவும் கொண்டாடுவது உண்டு. ஐந்தாம் நாளை ‘எம துவிதா” வாக வட மாநிலங்களில் கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல், இந்த திருநாளை மகாராஷ்டிரா, குஜராது ஆகிய மாநிலங்களிலும், நேபாளத்திலும் சிறப்பாக நடத்துகின்றனர்.

ஒருமுறை ஐப்பசி மாத வளர்பிறை துவதி அன்று தன் சகோதரி ‘எமி’ வீட்டிற்கு எமதர்மன் சென்றிருந்தார். அவருக்கு ஆரத்தி எடுத்து, மாலை சூடி, திலகம் இட்டு அன்புடன் வரவேற்று ஒருவருக்கொருவர் பரிசுகளும் இனிப்புகளும் வழங்கி பாசத்தைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்த நன்நாளில் தன் சகோதரி எமியின் கைகளால் திலகம் இட்டுக் கொள்பவர்களை துன்புறுத்த மாட்டார் என்றும் அவர்களுக்கு எமவாதனை கிடையாது என்றும் வரம் தந்ததாக புராணம் கூறுகிறது.

இதனால் எம துவிதியைத் திருநாளில் வடநாட்டுப் பெண்கள், தங்கள் சகோதரர்களை சந்தித்து, அவர்களின் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்துகின்றனர். சகோதரப் பாசத்தை வளர்க்கும் இந்த விழாவை ‘எமனுக்குப் பிடித்த விழா’ என்றும் புராணங்கள் போற்றுகின்றனர்.

தீபாவளியை ஒட்டி வரும் எம துவிதியை மற்றும் எம தீபம் ஏற்றும் திரயோதசி ஆகிய தினங்கள் எமதர்மருக்கு உகந்தவை என்பதால் அந்நாளை எமர்தர்மனும் விரும்புவதாக ஆன்றோர்கள் கூறுகின்றனர்.

WATCH OUR LATEST NEWS