கடாரம் : சமூகத்தின் குரல் ஓங்குமா ?

இராஜேந்திர சோழன் காலத்தில் எத்தனையோ போர்களைத் தம் ஆட்சிக் காலத்தில் நடத்திய போதும் அவன் வடக்கே சென்று கங்கையையும், கடல் கடந்து கடாரத்தையும் வெற்றி கொண்டமைதான் அக்கால மக்கள் மனதையும், புலவர்கள் மனதையும் கவர்ந்து நின்றன. கல்வெட்டுகள் பூர்வ தேசமும் கங்கையும் கடாரமும் கொண்ட கோப்பரகேசரி வர்மன் என்று அவனைப் புகழ்ந்தன.

சோழன் கடாரம் வென்றது வரலாறு. வீசும் காற்றை நம்பிக் கப்பலை ஓட்டிக் கடாரம் போய்ச் சேர சுமார் நூறு நாள்களாவது ஆகும். அவ்வாறு போய்ப் புதிய தேசத்தில் போர் செய்வது சுலபமானதன்று. ஆயினும், நாட்டைக் கைப்பற்றும் நோக்கத்திற்கு அப்பால் வேறு காரணங்கள் வலுவாய் இருப்பதாக வரலாறு கூறுகின்றது.

சோழர் காலத்திலும் தமிழரின் வர்த்தகம் கடல் தாண்டி நடந்திருக்கிறது. கடாரம் எனும் பகுதியிலும் கடல் தாண்டிய வாணிகம் மேலோங்கி அரபு, சீனா வர்த்தகர்களின் வர்த்தகச் சந்தையும் அவர்களோடு தமிழ் வர்த்தகர்களின் வர்த்தகமும் கொடி கட்டிப் பறந்தன.

தொடக்கத்தில் சோழ ஆட்சியும் கடார ஆட்சியும் நட்பு கொண்டிருந்தன. ஆனால், காலப் போக்கில் கடாரத்தை ஆண்டு வந்த ஸ்ரீவிஜய நாட்டின் அதிகாரிகள் தமிழ் வர்த்தகர்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டதை ஒற்றர்கள் மூலமும், வர்த்தகர்கள் மூலமும் அறிந்த சோழ மன்னன் இராஜேந்திர சோழன் கடல் வழியே படையெடுப்பைக் கடாரத்தின் மீது மேற்கொண்டு கடாரத்தை வென்றான்.

கடாரம் சோழ மன்னன் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழரின் கடல் தாண்டிய வர்த்தகம் மட்டுமல்ல; வேறு நாட்டவர்களின் வர்த்தகமும் தடையின்றி நடந்தது. கடாரம் என்ற கடற்கரைப் பிரதேசத்தைப் பத்துப்பாட்டுகளுள் ஒனான பட்டினப்பாலையில்,

கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும்

என்ற வரிகளில் சொல்லப்படும் காழகம் என அதற்கு உரைகண்ட நச்சினார்க்கினியர் கருதினார்.

காழகம் எனத் தமிழின் சங்க இலக்கியம் சொன்ன நிலமே கடாரம் ஆகும். அந்தக் கடாரமே இன்று மலேசியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள கெடா மாநிலமாகும். கெடா மாநிலத்தில் சோழன் ஆட்சி செய்ததற்கான சான்றுகளாகப் புராதனச் சின்னங்கள் குவிந்து கிடக்கும் இடம்தான் பூஜாங் பள்ளத்தாக்கு ஆகும்.

பூஜாங் எனும் மலாய் மொழிச் சொல் நாகப்பாம்பினைக் குறிக்கும். புஜங்க எனும் சமஸ்கிருத மொழிச் சொல்லோடு தொடர்புடையதென்றும் மெர்போக், பூஜாங் ஆகிய பெரிய ஆறுகளின் ஓடுபாதை பெரிய ஒரு நாகப்பாம்பின் உருவத்தை ஒத்த காரணத்தால் அந்த ஆறுகள் பாய்ந்து ஓடும் பள்ளத்தாக்கிற்குப் பூஜாங் என்னும் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம் எனச் சொல்கிறார் வரலாற்று நூல் ஆசிரியர் டத்தோ வீ. நடராஜன்.

லெம்பா பூஜாங் என மலாய் மொழியில் அழைக்கப்படும் இந்தப் பூஜாங் பள்ளத்தாக்கு ஏறக்குறைய ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்புடையதாகும். அந்தப் பெரிய நிலப்பரப்பில் பாய்ந்து ஓடும் ஆறுகளுள் மெர்போக், பூஜாங், மூடா, சிம்போர், பாசிர் எனப்படும் ஆறுகளும், மெர்போக் கெச்சில் எனப்படும் சிற்றாறும் அடங்கும். மேற்கூறிய ஆறுகளில் மிகப் பெரிய ஆறுகளாக விளங்குபவை கிழக்கிலிருந்து மேற்கில் மலாக்கா நீரிணையை நோக்கிப் பாயும் மெர்போக் ஆறும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடி மெர்போக் ஆற்றோடு கலக்கும் பூஜாங் ஆறுமாகும்.

பூஜாங் வெளியில் ஓடும் ஆறுகளின் கரையோரத்தில் புராதனச் சின்னங்களின் சிதைவுகள் நிறையவே இருக்கின்றன. பூஜாங் பள்ளத்தாக்கு 10ஆம் நூற்றாண்டில் பன்னாட்டு வணிகர்களின் கப்பல்கள் வந்து நிற்பதற்கு ஏதுவான துறைமுக வசதிகள் கொண்ட கரையோர நகரமாய் இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் இருக்கின்றதாகவும் அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

இராஜேந்திர சோழன் தமிழகத்திலிருந்து படை திரட்டி வந்து இந்த இடத்தைக் கைப்பற்றினான் என்றால் அது முக்கியமான இடமாக இருந்திருக்க வேண்டும். இன்றைக்கு இந்தப் பள்ளத்தாக்கில் கிடைத்து வரும் பழங்காலப் பொருள்கள் இந்தப் பள்ளத்தாக்கு சிற்பக்கலை, நெசவுக்கலை, கட்டடக்கலை முதலியவற்றில் நாகரிகம் படைத்தவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதையும் ஒரு நாகரிக வெளிப்பாடுகள் நிறைந்த பன்னாட்டுத் துறைமுகமும் அதனை நிர்வகிக்கும் அமைப்பும் இருந்ததைத் தெளிவுபடுத்துகிறது.

பூஜாங் பள்ளத்தாக்கை ஒட்டி உணவு உற்பத்தியில் நெல் முதலிடம் வகித்ததையும், இரும்பு, பொன் முதலிய பொருள்கள் கிடைத்துள்ளன என்பதையும் வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். காழகம் என்பதில் காழ் எனும் வேர்ச்சொல்லில் உருவானது எனப் பார்க்கிற போது, இரும்பு உற்பத்தியில் பூஜாங் வெளி சிறப்புப் பெற்றிருக்கிறது.

பூஜாங் பள்ளத்தாக்கு 14ஆம் நூற்றாண்டு வரையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த இடமாகவும், செழிப்பும் வனப்பும் நிரம்பிய பகுதியாகவும், கடல் வர்த்தகப் பகுதியாகவும் விளங்கியிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த கடலோடிகளும், வர்த்தகர்களும், பூஜாங் பள்ளத்தாக்கில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தங்கியிருந்தபோது தங்கள் கலாசாரத்தையும், மதச் சடங்குகளையும் கடைபிடித்திருக்கிறார்கள். இதன் தாக்கம் அக்காலக் கட்டத்தில் அங்கிருந்தவர்களையும் தழுவியிருக்கிறது.

இந்தியாவிற்கும், சீனாவிற்குமிடையே கப்பல் பயணம் மேற்கொள்கிறவர்கள் வீசும் பருவக் காற்று மாற்றத்திற்காகக் காத்திருக்கவும், ஓய்வெடுக்கவும், பாதுகாப்புக்காகவும் இந்தப் பூஜாங் பள்ளத்தாக்கு துறைமுகத்தைத் தேர்ந்தெடுத்தனர்.

பூஜாங் பள்ளத்தாக்கில் சைவ சமய வழிபாட்டுச் சின்னங்கள், சிதைவுகளில் இருந்து கண்டெடுக்கப்படுவது போல் பௌத்த மதச் சின்னங்களும் கண்டெடுக்கப்படுகின்றன. கி.பி.4 முதல் கி.பி.10ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பௌத்த மதத்தைச் சார்ந்தவர்களால் வழிபாட்டுத் தலங்கள் இங்கு உருவாக்கப்பட்டுள்ளன.

ஆயிரக்கணக்கான புராதனச் சின்னங்களும், கலைப்பொருள்களும் சிவன், விநாயகர், துர்க்கை ஆகிய தெய்வச் சிலைகளும் கண்டெடுக்கப்பட்டு அகழ்வாய்வு அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைத்துள்ளனர். சிதைந்த நிலையில் பூஜாங் பள்ளத்தாக்கில் தென்பட்ட முதல் ஆலயம் 1840ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும் என்று அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது எனக் கூறுகிறார் நாகராஜன்.

50க்கும் மேற்பட்ட சிறு வழிபாட்டுத் தலங்கள் சிதைந்த நிலையில் அடையாளம் காணப்பட்டன. சந்தி (சண்டி) என அழைக்கப்படும் வழிபாட்டுத் தலங்கள் மரணமடைந்த மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக வழிபடவும், மதச்சடங்குகள் மேற்கொள்ளவும் அப்போது பயன்பட்டிருக்கின்றன.

இவ்வாறு தோண்டத் தோண்ட கிடைத்துக் கொண்டே இருக்கின்ற நம் முன்னோர்களின் வரலாற்றுச் சுவடுகள் நமக்குப் பெருமைதான்.

இருப்பினும், இதன் அடுத்த கட்டமாக நாம் என்ன செய்ய போகிறோம் எனும் கேள்வி எழுகிறது. பூஜாங் பள்ளத்தாக்கு மட்டும் அல்ல, ஜொகூர் கோத்தா கெலாங்கி, கங்கா நெகாரா என்று அழைக்கப்படுகிற பேராவின் புருவாஸ் போன்ற பகுதிகள், மலாக்கா நீரிணையை ஒட்டியப் பகுதிகளிலும் மலாக்கா ஆற்றிலும் சில ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் 13ஆம் நூற்றாண்டு வரலாற்றுச் சின்னங்கள் யாவையும் மீட்டுக் கூடுதல் அகழ்வாய்வு நடத்தப்பட வேண்டும் என சில இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன.

வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்பம், திறன்கள், வல்லுநர்கள் பெற்று தர உதவிகள் புரிவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றுளவும் சில முக்கியமான ஆராய்ச்சிகள் நடத்தப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்படுவதாகவும் சில உண்மைகள் முழுமையாக வெளிக்கொணரப்படவில்லை எனவும் ஆங்காங்கு பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலை மாறுமா எனவும் சமூக நிலையில் இதற்கான குரல் ஓங்குமா எனவும் கேள்வி எழுந்துள்ளது.

மேலும், நம் வரலாற்றுச் சுவடுகளை வேறு ஒரு தரப்பு சொந்தம் கொண்டாடிய நாடகங்களும் இதே நாட்டில் அரங்கேறிய அவலத்தை யாரும் மறுப்பதற்கில்லை.

எனவே, நம் சமூகம் இன்னமும் மௌனம் காத்திருந்தால் நிச்சயம் பல பரம்பரை சொத்துகள் கையை விட்டுப் போவதை யாரும் தடுக்க முடியாது என வரலாற்று ஆய்வாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் குறிப்பிடுகிறார்கள்.

வரலாறு மிக முக்கியம் அமைச்சரே …!

WATCH OUR LATEST NEWS