சித்தியவானில் “ஒரு தாய் வீடு”

இன்றைய சமூக சூழலில், சொந்த பந்தங்களுடன் வாழும் பலர் தங்களின் அடிப்படை தேவைகளுக்குப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், தம் உறவுகளால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற நிலையில் இருப்பவர்களுக்கு ஒரு தாய் வீடாக விளங்கி வருகிறது சித்திவானில் உள்ள ஒரு காப்பகம்.

ஆதரவற்ற சிறார்களுக்குத் தேவையான உணவு, கல்வி, மருத்துவம், தங்குமிடம் ஆகியவற்றை தன்னால் இயன்றளவு வழங்கும் தன்னலமற்ற பணியினைச் சனாதன தர்ம ஆசிரமம் செய்து வருகிறது.

பிறந்த யாருமே ஆதரவற்றவர்கள் கிடையாது. நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் அரவணைத்துக் கொள்கின்ற ஒரு குடும்பத்தின் உறவுகள்தாம் என்பதைப் போதிக்கிறது இந்த ஆசிரமம்.

எண். 101, ஜாலான் அஸ்தாக்கா, கம்போங் செர்டாங், சித்தியவானில் அமைந்துள்ள சனாதன தர்ம ஆசிரமத்திற்கு நேரில் சென்று அங்குள்ள குழந்தைகளையும் அந்த ஆசிரமத்தின் தலைவரையும் அண்மையில் சந்திக்க நேர்ந்தது.

இந்து சமயத்தின் உண்மையான பெயர்தான் சனாதன தர்மம். ஆதலால், அப்பெயரையே இந்த ஆசிரமத்திற்கு வைத்துள்ளதாக அந்த ஆசிரமத்தின் தலைவரும் நிறுவனருமான திரு.எரம்பன் செல்லப்பா கூறினார். இந்த ஆசிரமம் மஞ்சோங் இந்து சபாவின் ஆதரவில் நடத்தப்பட்டு வருகிறது.

1995ஆம் ஆண்டு இந்த ஆசிரமம் ஆரம்பிக்கப்பட்டது. பெற்றோரால் கைவிடப்பட்ட இரண்டு குழந்தைகளுடன் மட்டுமே ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆசிரமத்தில் ஈராண்டுகளுக்கு முன்பு 55 குழந்தைகள் வரை இருந்தனர். பலரும் படித்து முடித்து தற்போது வெளி மாநிலங்களில் வேலை செய்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது 25 குழந்தைகள் இங்குப் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள்.

பெற்றோரால் கைவிடப்பட்டவர்கள், பெற்றோர்களை இழந்தவர்கள், தன்னையே கவனித்து கொள்ள முடியாத நிலையில் வாழ்கின்ற தனித்து வாழும் தாய்மார்கள் அல்லது தந்தையர்களின் அரவணைப்பில் இருந்தவர்கள், பெற்றோரால் சித்திரவதை செய்யப்பட்டவர்கள் இந்தச் சனாதன தர்ம ஆசிரமத்தில் உள்ளார்கள் என்று எரம்பன் கூறினார்.

சித்தியவானைச் சேர்ந்த பிள்ளைகள் மட்டுமின்றி பல ஊர்களைச் சேர்ந்த பிள்ளைகளும் இந்தச் சனாதன தர்ம ஆசிரமத்தில் இருக்கின்றனர். குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இங்கு இருக்கிறார்கள். அவர்களை முறையாகக் கவனித்து கொள்வதற்காக இங்குப் பணியாளர்களையும் வேலைக்கு அமர்த்தியுள்ளோம்.

இது முழுமையான சைவ ஆசிரமம் ஆகும். இங்கு அசைவ உணவிற்கு அனுமதியில்லை. இங்கிருக்கும் அனைத்து பிள்ளைகளுக்கும் சைவ உணவுதான் வழங்கப்படுகின்றது. இங்கு வரும் சில பிள்ளைகள் கல்வி அறிவே இல்லாமல் வருகின்றனர். அதில் அவர்களைக் குறை கூறுவதில் சிறிதும் அர்த்தமில்லை; நியாயமும் இல்லை. காரணம், அவர்களின் குடும்ப சூழ்நிலை அவ்வாறு இருந்திருக்கலாம். இருப்பினும், இங்கிருக்கும் அனைத்து பிள்ளைகளையும் நான் தவறாமல் பள்ளிக்கு அனுப்புகிறேன்.

அவர்களுக்கென இங்கு 3 மூடுந்துகள் (வேன்) உள்ளன. 3 மூடுந்துகளின் ஓட்டுநர்களும் அவர்களை மிகவும் பாதுகாப்பாகவும் கவனமாகவும் சரியான நேரத்திற்குள் பள்ளிக்கு அழைத்து செல்வார்கள். அதேபோல் பள்ளி முடிந்ததும் மீண்டும் பாதுகாப்பாக ஆசிரமத்தில் வந்து சேர்த்து விடுவார்கள்.

இங்குள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமய வகுப்பு, கல்விக் கருத்தரங்கு, தன்முனைப்புத் தூண்டல் பயிற்சி போன்றவற்றை நடத்துகிறோம். இதுவரை இங்கு வளர்ந்த எந்தப் பிள்ளையும் தீய வழிக்குச் சென்றதில்லை. அனைவரும் மிகவும் ஒழுக்கத்துடன் நல்வழியில்தான் சென்றுள்ளார்கள் என்று திரு.எரம்பன் குறிப்பிட்டார்.

எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறாத மாணவர்களைத் தொழில்திறன் பயிற்சியில் சேர்த்து விடுவேன். அவர்கள் மேற்படிப்பைத் தொடர முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் நல்குவேன். இங்குத் திறன் பயிற்சியில் இணைந்து சொந்தத் தொழில் ஆரம்பித்தவர்களும் இருக்கிறார்கள்.

அதேபோல் டிப்ளோமா பட்டப்படிப்பு படித்து ஆசிரியர் பயிற்சிக்குத் தேர்வானவர்களும், பல்கலைக்கழகம் வரை படித்த பட்டத்தாரிகளும் உள்ளனர் என்று பெருமிதத்துடன் அவர் கூறினார்.

இங்கு வளரும் பிள்ளைகளுக்கு நாங்களே பூப்பெய்தல் சடங்குகள், பரிசம், நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு, குழந்தை பெயர்சூட்டு விழா, பிறந்தநாள் என அனைத்தையும் நடத்தி வைப்போம். காரணம், இதுதான் அவர்களின் தாய் வீடு என்கிறார் எரம்பன்.

அதோடு இங்கிருக்கும் அனைத்து குழந்தைகளும் தீபாவளிப் பண்டிகையின்போது மட்டுமே புத்தாடைகளும் புது காலணிகளும் அணியும் வாய்ப்பைப் பெறுகின்றனர். பின்னர், ஆண்டு முழுவதும் அவர்கள் பழைய அல்லது உபயோகித்த துணிமணிகளையே அணிகின்றனர்.

கடந்த மாதம் கொண்டாடப்பட்ட தீபாவளிக்கும் அவர்களுக்கான புத்தாடைகளையும் காலணிகளையும் வாங்கினோம். இங்கு இருப்பவர்கள் அனைவரையும் என்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போல் கவனித்து கொள்கிறேன். என் சொந்தப் பிள்ளைகளுக்கு என்ன செய்வேனோ, அதையேதான் இந்தப் பிள்ளைகளுக்கும் செய்து வருகிறேன்.

தீபாவளிக்கு ஓரிரு வாரங்கள் இருக்கும்போதே பணியாளர்களுடன் இணைந்து பிள்ளைகள் பலகாரங்களைச் செய்வார்கள். தீபாவளி முதல் நாளன்று பிள்ளைகள் அனைவரும் ஒன்றிணைந்து கோலமிட்டு இல்லத்தை அலங்கரிப்பர்.

தீபாவளியன்று அதிகாலை 4.00 மணியளவில் பிள்ளைகள் அனைவருக்கும் எண்ணெய்க் குளியல் செய்து விடுவேன். எண்ணெய்க் குளியலுக்குப் பிறகு பிள்ளைகள் புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வர். இல்லத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அனைவரையும் ஆலயத்திற்கு அழைத்து செல்வோம். அங்குச் சிறப்பு வழிபாட்டிற்குப் பிறகு வீடு திரும்பியவுடன் தடபுடலாக விருந்தோம்பல் நடைபெறும். பிள்ளைகளும் ஆடல் பாடல், விளையாட்டு, நாடகம், நகைச்சுவை எனத் தங்களின் படைப்புகளைப் படைப்பர். அதைப் பார்ப்பதற்கே பெரும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று திரு.எரம்பன் சொன்னார்.

மொத்தத்தில் எங்கள் இல்லத்தில் உள்ள பிள்ளைகள் அனைவரும் ஒரு குடும்பமாகத்தான் இருக்கின்றனர். இந்த ஆசிரமத்தில் தங்கிப் படித்தவர்கள் பலரும் தற்போது வெளிமாநிலங்களில் வேலை செய்து கொண்டிருக்கின்ற போதிலும் வருடா வருடம் தீபாவளிக்கு மறவாமல் இங்கு வந்து எங்களுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவார்கள். திருமணமாகி சென்றவர்கள் கூட அவர்களின் குடும்பங்களுடன் இங்கே வந்து 2, 3 நாள்களுக்கு இங்கேயே தங்கி ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து தங்கள் சகோதர சகோதரிகளுடன் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர் என்றார் எரம்பன்.

நாங்கள் எங்களால் முடிந்தவரை அவர்களுக்குப் பெற்றோரின் ஏக்கம் வராமல் பார்த்து கொள்கிறோம். என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை என் குழந்தைகளுக்காக நான் இருப்பேன். எனக்குப் பிறகு நிர்வாகத்தினரும் அவர்களை நன்கு கவனித்து கொள்வர் என்று எரம்பன் கூறினார்.

நாங்கள் இங்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். எங்களின் சொந்த வீட்டில் இல்லாத வசதிகளை இங்கு எங்களுக்காக எரம்பன் ஐயா ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார். தீபாவளிக்கென எங்கள் அனைவருக்கும் 2 ஜோடி புத்தாடைகளும், காலணிகளும் வாங்கியதாக இந்த ஆசிரமத்தைச் சேர்ந்த அன்புக் குழந்தைகள் கூறினார்கள்.

இந்தப் பாசமிகு குழந்தைகளுடன் தீபாவளியைக் கொண்டாடியது மகிழ்ச்சியின் உச்சமாகும். எனவே, முடிந்தால் நாமும் இக்குழந்தைகளின் ஆசிரமத்திற்குச் சென்று அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவோம். அதுமட்டுமின்றி நம்மால் முடிந்த அன்பளிப்புகளை வழங்கி அவர்களையும் மகிழ்ச்சிப்படுத்துவோம்.

சனாதன தர்ம ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு நல்லுள்ளம் படைத்த யாரேனும் ஏதாவது உதவிகள் செய்ய வேண்டும் என்று விரும்பினால் 05-691 2437 அல்லது 013 – 5215198 என்ற எண்ணில் திரு.எரம்பனைத் தொடர்புக் கொள்ளலாம்.

WATCH OUR LATEST NEWS