மக்களுடன் இரண்டறக் கலந்த மாமனிதர் ஜோகூ சுல்தான்

‘ஜீவா ராக்யாட்’ என்ற சொற்றொடருக்கு ஏற்ப மக்களுடன் இரண்டறக் கலந்த மாமனிதராக இன்றும் பார்க்கப்படுபவர் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார்

தமது தந்தையார் காலஞ்சென்ற சுல்தான் இஸ்கண்டார் இஸ்மாயிலைப் போலவே ஜோகூர் மக்களின் மனங்களில் இடம்பெற்றவர் சுல்தான் இப்ராஹிம் ஆவார். சுல்தான் இப்ராஹிம், நடந்து முடிந்த மலாய் ஆட்சியாளர்கள் சிறப்புக் கூட்டத்தில் நாட்டின் 17 வது மாமன்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரின் ஐந்தாண்டுகால பதவிக்காலம் அடுத்த ஆண்டு சனவரி 31 ஆம் தேதி தொடங்குகிறது.

65 வயதை எட்டும் சுல்தான் இப்ராஹிமின் வெளிப்படையான பேச்சு, கொள்கையில் உறுதி, செயல்பாட்டுத் திறன் ஆகிய ஆளுமைகள் அவரை நாட்டின் மாமன்னராகத் தேர்வு செய்வதற்கு அடித்தளமாக அமைந்துள்ளது.

ஒன்பது ஆட்சியாளர்கள் கொண்ட மலாய் சுல்தான்கள் வரிசையில் தனித்துவம் நிறைந்தவராகக் காணப்படும் சுல்தான் இப்ராஹிம் இனம், சமயம், மொழி ஆகியவற்றைக் கடந்து தனது மாநில மக்களை ஒரே இனமாக அதுவும் ஜோகூர் இனமாக வகைப்படுத்தி இருப்பது அவரின் ஆளுமையை மேலோங்கச் செய்துள்ளது.

இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக பிற இனத்தவர்களைப் போலவே ஜோகூர் இந்தியர்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அவர் அளித்து வரும் முன்னுரிமைகள் மாநில இந்தியர்களின் சமூகவியல் பொருளாதாரத்திற்கு ஓர் உத்திரவாதமாக அமைந்துள்ளது என்பதற்கு அவரின் சிந்தனையில் உருவான சுல்தானா ரோகாயா அறவாரியம் மிகச் சிறந்த சான்றாகும்.

கடந்த 2010ஆம் ஆண்டு சனவரி 23 ஆம் தேதி ஜோகூர் சுல்தானாக நியமிக்கப்பட்ட சுல்தான் இப்ராஹிம், 2015ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி அரியணையில் அமர்ந்தார். அந்த நன்னாளை ஒட்டி ஜோகூர் மாநில மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை அறிவித்த நிலையில், மாநில இந்தியர்களுக்காக சுல்தானா ரோகாயா அறவாரியத்தையும் அமைத்தார்.
ஜோகூர் மாநிலத்தில் வறிய நிலையில் உள்ள இந்தியர்களின் உயர்வுக்காக அவர்களின் சமூகவியல் பொருளாதார முன்னெடுப்புக்காக இந்த அறவாரியத்தை அமைத்ததுடன் அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பெரும் உந்துதலாக அமைந்தது.

இதைப் போன்று சமய விவகாரங்களில் வெளிப்படையாக தமது கருத்துகளைத் தெரிவிப்பது மூலம், மாநில மக்கள் மட்டும் இன்றி மலேசிய மக்களின் மனம் கவர்ந்த ஓர் ஆட்சியாளராக சுல்தான் இப்ராஹிம் நோக்கப்படுகிறார்.

குறிப்பாக, இவ்வாண்டு தைப்பூசக் காலக் கட்டத்தில் முஸ்லிம்கள் அந்த சமய விழாவில் கலந்து கொள்ளக் கூடாது என்று பல்வேறு மாநிலங்களின் இஸ்லாமிய சமய அறிஞர்கள் அறிவுறுத்தி இருந்தனர். இந்துக்கள் கொண்டாடும் ஒரு விழாவில் முஸ்லிம்கள் பங்கெடுக்கக் கூடாது என்று ஆணை பிறப்பித்திருந்தனர்.

இந்நிலையில், பிற மதங்களின் சடங்குகளிலும் வழிபாடுகளிலும் முஸ்லிம்கள் பங்கேற்காத வரை, முஸ்லிம்கள் மற்ற வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்லலாம். விழாக்களில் கலந்து கொள்ளலாம் என்று ஜோகூர் சுல்தான் வெளியிட்ட ஒரு வெளிப்படையான அறிக்கையானது நடைமுறையில் இருந்த சில சிக்கல்களுக்கு விடை காண்பதாக இருந்தது.

அதே வேளையில், இந்த ஆண்டு தைப்பூச விழாவில் ஜோகூர் ஸ்கூடாய் அருள்மிகு பாலசுப்ரமணியர் திருக்கோயிலுக்கு வருகை தந்து சமயங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை வலு பெறச் செய்துள்ளார்.

இதே போன்று தீபாவளி காலத்தில் அவர் நேரடியாக மக்களைச் சந்தித்து, தமது வாழ்த்துகளைத் தெரிவித்து இந்துக்களின் அந்த உன்னதத் திருநாளுக்கு மெருகூட்டியுள்ளார்.

அரசியல் தேவைக்காகத் தேர்தல் காலத்தில் மட்டும் கரிசனை காட்டும் தரப்பினர போல் இல்லாமல் என்றுமே எல்லாருக்கும் பொதுவாக, நியாமாக ஆட்சி செய்யும் சுல்தானாகப் போற்றப்படுகிறார் சுல்தான் இப்ராஹிம்.

இந்திய இயக்கங்கள் நடத்தும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொள்ளத் தவறியதில்லை. பல இந்தியத் திருமணங்களில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தியும் உள்ளார் அவர்.

பல்லினம் வாழும் இந்நாட்டில், ஒற்றுமைக்கு முதன்மை இடத்தை வழங்கி பிரிவினையை அடியோடு வெறுப்பதால், ஜோகூர் இனம்’ அதாவது பங்சா ஜோகூர் எனும் கொள்கையை அவர் முன்னெடுத்துள்ளார். அதன் பலனை நாம் இன்றும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

பங்சா ஜோகூர் எனும் கொள்கைக்கு அவர் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்து வந்தார் என்பதை கடந்த கோவிட்-19 காலம் முதலே நாம் நேரடியாகப் பார்த்துள்ளோம்.

கடந்த ஆண்டு பி40 இந்தியர்கள் தீபாவளியைக் கொண்டாட்டத்தில் எந்தத் தடையும் வந்து விடக் கூடாது என எண்ணிய மாட்சிமை தாங்கிய ஜோகூர் சுல்தான் இப்ராஹிம், அரண்மனையில் இருந்து உதவிப் பொருட்களை மக்களுக்கு நேரடியாகவே கிடைக்க ஏற்பாடுகளைச் செய்தார். அன்றையக் காலக் கட்டத்தில் அந்த உதவிப் பொருட்களைப் பெற்ற மக்களின் முகத்தில் பேரானந்தத்தைக் காண முடிந்தது.

எதிர்ப்பார்த்திடாத நேரத்தில், எதிர்ப்பார்த்திடாத சந்தர்ப்பத்தில் தாமே கரைச் செலுத்திக் கொண்டு காலைச் சிற்றுண்டி சாப்பிட கடைக்கு வருவதை எத்தனை சுல்தான்கள் செய்திருக்கிறார்கள் என எண்ணிப் பார்க்க வைக்கின்றது. உணவு உண்ட பிறகு, சற்று நேரம் மக்களுடன் நேரத்தைச் செலவு செய்த பின்னரே அவ்விடத்தில் இருந்து புறப்படுவார்.

இத்தகைய மாண்புக்கும் பண்புக்கும் உரியவரான மேன்மை தங்கிய ஜோகூர் சுல்தான் நாட்டின் 17வது மாமன்னராக தேர்வு செய்யப்பட்டிருப்பது மக்களின் ஒருமைப்பாட்டுக்கும் நாட்டின் வளப்பத்திற்கும் வலு சேர்க்கும் என்பது திண்ணம்.

WATCH OUR LATEST NEWS