தொழில்திறன் பயிற்சி மற்றும் மனித மூலதன மேம்பாட்டை முதன்மை நோக்கமாகக் கொண்ட எச்.ஆர்.டி.கோர்ப் மனிதவள அமைச்சின் கீழ் செயல்பட்டு வருகின்ற பல்வேறு அரசாங்கச் சார்பு நிறுவனங்களுள் ஒன்றாகும். இதன் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சாகுல் ஹமீட் ஆவார். அரசாங்கச் சார்பு நிறுவனங்களில் நிகழ்கின்ற பல்வேறு முறைகேடுகள், நிர்வாகத் திறன் குறைபாடுகள் ஆகியவற்றை அவ்வப்போது பத்திரிக்கைகள் சுட்டிக்கட்டி வருகின்றன.
அந்த வகையில், டத்தோ சாகுல் ஹமீட் தலைமையிலான எச்.ஆர்.டி.கோர்ப் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்பாளர்கள் வெளிப்படையாக ஏமாற்றப்பட்டு இருப்பதாகத் திசைகள் அண்மையில் ஆதாரப்பூர்வமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தது. இளையோர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களைத் திறன் பெற்ற தொழிலாளர்களாக உயர்த்தும் உன்னத நோக்கத்தைக் கொண்டுள்ள எச்.ஆர்.டி.கோர்ப்-இன் பலவீனத்தைத் திசைகள் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியதுடன் அந்த அரசாங்கச் சார்பு நிறுவனத்தில் புகாரும் அளித்திருந்தது.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல, எச்.ஆர்.டி.கோர்ப்-இல் நிகழ்வதாகக் கூறப்படும் முறைகேடுகளில் ஒன்றாக இக்குற்றச்சாட்டைத் திசைகள் பகீங்கரப்படுத்தியும் அதை ஆராய்வதற்குக்கூட எச்.ஆர்.டி.கோர்ப்-இல் நாதியில்லை.
இத்தகைய பலவீனம் நிறைந்த ஓர் அமைப்புதான் இளையோர்களுக்கு வழிகட்ட போகிறதா என்ற சந்தேகமும் வலுக்கத் தொடங்கியது. திசைகளின் குற்றச்சாட்டின்படி, ” எச்.ஆர்.டி.கோர்ப் திட்டங்கள் – கோப்பிக் கடை சான்றிதழா? ஏமாற்றத்தில் பங்கேற்பாளர்கள்” எனும் தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. குறிப்பாக, அதன் மெத்தனப்போக்கைச் சுட்டிக்காட்டி இருந்தது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட பயிற்சித் திட்டத்தில் நடந்த ஏமாற்று வேலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாத விவகாரத்தைத் திசைகள் அந்தச் செய்தியில் அம்பலப்படுத்தி இருந்தது. கடந்த மே மாதம் மின்னஞ்சல் வழி கொடுத்த புகார் அடிப்படையிலும், ஜூலை மாதம் நேரில் சென்று கொடுத்த புகார் அடிப்படையிலும் எந்த நடவடிக்கையும் எடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படவில்லை.
கடந்த மே மாதம் 20ஆம் திகதி கொடுத்த முதல் புகாரைக் கண்டு கொள்ளாத எச்.ஆர்.டி.கோர்ப், ஜூன் மாதம் 20ஆம் திகதி கொடுத்த இரண்டாவது புகாரில் இருந்துதான் செயல்படத் தொடங்கி இருக்கிறார்கள்.
திசைகளில் இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்தும், அதற்கு எச்.ஆர்.டி.கோர்ப் தரப்பிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் புகார் அளித்தவர் நேரில் சென்று பார்த்து பல்வேறு கேள்விகள் எழுப்பிய பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் மட்டும் கூறி இருக்கிறார்கள்.
“அந்தப் பயிற்சி ஏற்பாட்டுக் குழுச் சற்றுப் பிரச்சனைக்குரியவர்கள்தான். இனிமேல் அவர்களுக்கு எச்.ஆர்.டி.கோர்ப் பயிற்சித் திட்டங்களை நடத்த வாய்ப்பளிக்கப்படமாட்டாது” என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இப்போது கொடுத்திருக்கும் புகாருக்கு அந்நிறுவனத்தின் நடவடிக்கை என்ன என்பது குறித்து வினவப்பட்டபோது, அவர்களிடத்தில் எந்தப் பதிலுமே இல்லை.
விசாரணை என்ற பெயரில் கடந்த 6 மாதங்களாக இந்த விவகாரம் கிணற்றில் போட்டக் கல்லாகக் கிடக்கிறது. கடந்த நவம்பர் 20ஆம் தேதி மீண்டும் எச்.ஆர்.டி.கோர்ப் நிறுவனத்தின் தலைமையகத்தில் புகார் அளித்தவர் நேரில் சென்று, தாம் அளித்த புகார் குறித்து மீண்டும் கேட்டபோது, வேறு இரு புதிய அதிகாரிகள் அவரைச் சந்தித்து இருக்கிறார்கள்.
இவ்வாறு, ஒவ்வொரு முறையும் புதிய அதிகாரிகளைச் சந்திக்கும்போதெல்லாம் ஆதி முதல் அந்தம் வரை என்ன நடந்தது என்று மீண்டும் விளக்க வேண்டிய கட்டாயத்திற்குப் புகார் அளித்தவர் தள்ளப்படுகிறார். இதுவரை, ஏழு முறை முழுக் கதையையும் மீண்டும் மீண்டும் சொல்லி தேய்ந்த ‘ரெக்கார்ட்’ ஆக ஆகியதுதான் மீதம்.
அப்படியானால், மின்னஞ்சல் வழி முறையாக எச்.ஆர்.டி.கோர்ப் நிறுவனத்திற்குக் கொடுத்த புகாரை எந்த அதிகாரியும் படிக்கவில்லையோ எனும் சந்தேகத்தை எழுப்புகிறது.
கொடுத்தப் புகாரை விசாரிக்கும் அதிகாரியை அலுவலகத்தில் காணவில்லை. ஒருவரைக் கேட்டால் இன்னொருவரைக் கை காட்டுவதும், அவரைக் கேட்டால் வேறொருவரைக் கை காட்டும் நாடகம்தான் அரங்கேறி வருகிறதே தவிர, தாம் கொடுத்த புகாரின் நிலவரம் குறித்து அதனைக் கொடுத்தவருக்குத் தெரிவிக்கப்படவே இல்லை.
புகார் கொடுத்து ஆறு மாதங்கள் ஆகின்றன. அதிகாரிகளை நேரில் சந்தித்து கூடுதல் தகவல்களைக் கொடுத்து 4 மாதங்கள் ஆகின்றன. ஆனால், இன்னும் பரிசீலனையில் இருக்கிறதாகவும், இனிமேல்தான் அதிகாரிகள் ஒன்றுகூடி கூட்டம் நடத்தி கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்போவதாகவும் கூறுவது எச்.ஆர்.டி.கோர்ப் நிறுவனத்தின் நிர்வாக மற்றும் மேலாண்மை ஆமையை விட மோசமாக இருப்பதைக் காட்டுகிறது.
இவ்வாண்டு (2023ஆம் ஆண்டு) இறுதிக்குள் இந்த விவகாரத்திற்கு எச்.ஆர்.டி.கோர்ப் நிறுவனம் சரியான நடவடிக்கை எடுத்து விடுமா! என அந்த அதிகாரிகளிடம் வினவப்பட்டபோது, அது குறித்து எந்தப் பதிலையும் தங்களால் சொல்ல முடியாது எனக் கையை விரித்துள்ளனர்.
கடந்த ஆறு மாதங்களாக இந்த விவகாரத்தைக் கிடப்பில் போட்டு வைத்திருப்பதற்கான காரணம் என்ன?
அல்லது, எச்.ஆர்.டி.கோர்ப் நிறுவனத்திற்கு வரும் எல்லா புகார்களும் இவ்வாறுதான் கையாளப்படுகிறதா?
காலம் தாழ்த்தியே சென்றால், மக்கள் மறந்து விடுவார்கள் என்று எண்ணி, இந்த விவகாரத்தை மூடி மறைக்கும் படலம் அரங்கேறுகிறதா?
எச்.ஆர்.டி.கோர்ப்-இல் இருப்பது இயலாமையா! முயலாமையா! அல்லது கண்டு கொள்ளாமையா! ஏதோ ஆமை இருப்பதால்தான் எச்.ஆர்.டி.கோர்ப் நிறுவனத்தின் நிர்வாக மற்றும் மேலாண்மை முறை ஆமை போல் இருக்கிறதோ?