சைவத்திலும் தீபாவளி விருந்து ! – செஃப் தேவ்

தீபாவளி என்றாலே உணவும் பலகாரமும்தான் முதன்மை. உணவு என்றாலே தீபாவளி சமையலில் ஆட்டிறைச்சிக்கும் கோழிக் கறிக்கும் தனி இடம்… இல்லை, இல்லை முதன்மை இடம் உண்டு எனலாம்.

அசைவத்தில் வகை வகையாகச் சமைத்து குடும்ப உறுப்பினர்களுக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் விருந்து வைத்து பகிர்ந்துண்டு கொண்டாடி மகிழ்வது நமது மரபு.

இதனிடையே, சைவப் பிரியர்களும் தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். ஆனால், அவர்களுக்கான உணவு வகைகள் என்று வரும்போது, பலர் பரிதாபமாகப் பார்க்கப்படுகிறார்கள்.

மேலும், தீபாவளிக்குச் சைவமா? கேட்கவே காது கூசுகிறதே என்று அசைவப் பிரியர்களால் கிண்டல் செய்வதும் உண்டு.

ஆனால், தமது சைவ சமையல் கலையால் அசைவ உணவுக்கு இணையான சுவையில் அதே மாதிரியான சைவ உணவால் சாத்தியப்படுத்தி காட்டி இருக்கிறார் சைவ சமையல் கலை வல்லுநர் செஃப் தேவ் !

வலையொளி (யூடியூப்), ‘டிக்டோக்’, படவரி (இன்ஸ்டாகிராம்), முகநூல் ஆகிய சமூக ஊடகங்களில் சைவ உணவுகளைச் சமைத்துக் காட்டும் தமது காணொலிகளைப் பகிர்ந்து நாடு தழுவிய நிலையில் பிரபலமான செஃப் தேவ், சைவ உணவுப் பிரியர்கள் தீபாவளி நாளன்று இரசம், சொதி, சாம்பார் போன்ற உணவைத்தான் சமைத்து உண்பார்கள் என்றில்லை எனவும் சைவ வகையிலும் சிறப்பு சமையல்களும் அசைவத்திற்கு இணையான உணவுகளும் இருப்பதாகவும் கூறுகிறார். சிகாமாட்டைச் சேர்ந்த தேவ் எனப் பரவலாக அறியப்படும் காளிதேவன் முருகையா அவர்கள் நவரத்தின குருமா, சைவ சுறா புட்டு போன்ற உணவுகள் பெருநாள் காலங்களில் புகழ்பெற்றவை எனக் குறிப்பிடுகிறார்.

கோழி இறைச்சியைப் போலவே சமைக்க முடிகின்ற ‘ஹெரிசியம்’ காளானை மக்கள் தற்போது பயன்படுத்த தொடங்கி இருப்பதாகக் கூறும் தேவ், கோழி வகைகளில் சமைக்கக்கூடிய அத்தனை உணவு வகைகளையும் இந்த ‘ஹெரிசியம்’ காளானைக் கொண்டு சுவையாகச் சமைக்க முடியும் என விளக்கினார்.

அதே போலதான், ஆட்டிறைச்சிக்கு மாற்றாக, ‘ஷிட்டாக்கே’ காளானைக் கொண்டு விழாக்காலங்களில் பிரமாதப்படுத்த முடியும் என்கிறார் அவர். காய்கறிகளை அடிப்படையாகக் கொண்டு சமைக்கப்படும் இந்த மாதிரியான உணவுகளால் ஆரோக்கியமும் உறுதி செய்யப்படுவதாகத் தேவ் மேலும் கூறினார்.

இப்படி மாற்று உணவு வகைகளை நாம் கண்டறிந்து விட்டாலே, சைவமாகச் சமைப்பது மிக மிக எளிது எனக் கூறும் தேவ், “அதே மசாலா, அதே சமையல் முறையைத்தான் நாம் தொடர்ந்து பயன்படுத்துவதால் சைவத்தில் அனைத்தும் சாத்தியமே”, என்கிறார்.
இனி சைவத்தில் உணவுத் தேர்வுகளுக்குப் பஞ்சம் என்று எண்ணி வருத்தப்பட வேண்டியதில்லை என செஃப் தேவ் கூறினார்.


தனிமையில் கடந்த தீபாவளி

இங்கிலாந்தில் விருந்தோம்பல் மேலாண்மைத் துறையில் (ஹோஸ்பிட்டலிட்டி மேனேக்மெண்ட்) முதுகலைப் பட்டம் வரை பயின்று 5 நட்சத்திர அனைத்துலகத் தர விடுதிகளில் 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை பணி புரிந்தார். உலகப் புகழ் வாய்ந்த ‘டிஸ்னி’ உல்லாசக் கப்பலிலும் வேலை செய்துள்ளார் தேவ்.

தொடக்கக் காலத்தில் அவர் பணி புரியும் நட்சத்திர உணவகத்தில் விடுமுறை என்பது குதிரைக் கொம்பு; அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. தமது சொந்த ஊரான ஜொகூரில் குடும்பத்தார்கள் வசிக்க, தேவ் பணியின் காரணமாகப் பினாங்கு மாநிலத்தில் இருக்க வேண்டிய சூழல். இப்படி வடக்கும் தெற்குமாய் இரு எதிர் துருவங்களில் குடும்பத்தாரைப் பிரிந்து தீபாவளி கொண்டாடியதை நினைவுகூர்ந்தார் தேவ்.

கிடைக்கின்ற ஒரு நாள் விடுமுறையில், பினாங்கில் இருந்து ஜொகூருக்குப் பயணித்து குடும்பத்தாரைச் சந்திப்பது சாத்தியமில்லாத ஒன்று. எனவே, வேறு வழியின்றி வேலைக்குச் செல்ல வேண்டிய நிலையில் தாம் இருந்ததாகத் தேவ் சொன்னார்.

தீபாவளி நாளன்று காலையில் வேலை செய்யும் உணவகத்தில் (கஃபேட்டேரியா) காலை சிற்றுண்டி சாப்பிடும்போது மனது மிகுந்த பாரமாக இருந்ததைத் திசைகளுடன் தேவ் பகிர்ந்து கொண்டார். நாட்டின் ஒரு துருவத்தில், தமது வீட்டில் காலையில் எண்ணெய் தேய்த்து குளித்த பிறகு, கோவிலுக்குச் செல்லுதல், தோசை, இட்டிலி எனத் தடபுடலான பசியாறல் என்று உற்சாகம் நிறைந்த தீபாவளி…
மற்றொரு துருவத்தில் தாம் பணி புரிகின்ற உணவகத்தில் ஒரு மூலையில், யாரிடமும் பேசாமல் குடும்பத்தாரின் நினைவுகளுடன் மட்டுமே அந்த நாளைக் கடத்தியது மிகுந்த வேதனையான ஒன்று என்று தேவ் தெரிவித்தார்.

குறிப்பாக, இந்தத் துறையில் ஈடுபட்டு வரும் பெரும்பான்மையோர் இவ்வாறான சூழலைக் கடந்துதான் வருவார்கள். வழக்கமாக, வார இறுதியில் வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியாய் நேரத்தைக் குடும்பத்துடன் செலவிடும்போது, தாம் பணியில் இருக்க வேண்டியதும், மற்றவர்கள் பணியில் இருக்கும் வார நாள்களில் தாம் வீட்டில் ஓய்வாக இருப்பதும் தொடக்கக் கால பணி சிரமம் என்றும் தேவ் சொன்னார்.

அதே வேளை, உல்லாசக் கப்பலில் தாம் பணி புரிந்த காலத்தில், எந்தப் பெருநாளாக இருந்தாலும், அந்த உற்சாகம் கொஞ்சம்கூட இருந்ததில்லை எனக் குறிப்பிடுகிறார். ‘குரூஸ்’ கப்பலில் இந்தியர்கள் பயணிப்பது மிகவும் அரிது. எனவே, தீபாவளி உணர்வும் நிச்சயமாக இருக்காது.

மேலும், கப்பலில் பணி புரிந்தபோது வேலை சூழ்நிலையில், 6 மாதங்கள் கடலில், 6 மாதங்கள் தரையில்.. ஆக, இவ்வாறான சூழலில் தீபாவளி கொண்டாட்டங்கள், குடும்பத்தாருடனான இனிய நினைவுகள் மிகக் குறைவு எனக் கூறினார் தேவ்.

எவ்வாறாயினும், குடும்பத்தாருடன் சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடுவதுபோல் வருமா என்கிறார் சைவ சமையல் கலை வல்லுநர் தேவ்.

WATCH OUR LATEST NEWS