தீபாவளி அன்று, அந்த 20 நிமிடங்கள் …

தீபாவளி என்றாலே கொண்டாட்டம்தான் பெரும்பான்மையினர் மனத்தில் நிழலாடும். மகிழ்ச்சிக்கும் உற்சாகத்திற்கும் அளவே இருக்காது எனலாம். உறவினர்கள், நண்பர்கள் வீட்டிற்கு வருவதும், உணவுகளைப் பரிமாறிக் கொள்வதும் ஆடிப்பாடி இன்பமாக இருப்பதே தீபாவளியின் அடையாளமாக இதுநாள் வரையில் நாம் கண்டு வந்ததாகும்.

ஆனால், தீபாவளி அன்று மற்றவர்களைப் போல் கொண்டாட முடியாமல், உற்றார் உறவினரைச் சந்திக்க முடியாமல், இன்னும் சொல்லப்போனால், சிறையில் தீபாவளியைக் கழிக்க வேண்டிய சூழல் என்றால், உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா?

தற்போது சமூக அமைப்புகளில் இனம், மொழி சார்ந்து போராட்டங்களை முன்னெடுத்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் சமூகப் போராட்டவாதி கலை முகிலனின் தீபாவளி வழக்கமான ஒன்றல்ல எனத் திசைகளுடன் பகிர்ந்து கொண்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டு தீபாவளிக்குச் சில நாள்கள் மட்டுமே எஞ்சி இருந்த நிலையில், நாடே அதற்கான ஆயத்த வேலைகளில் மிக மும்முரமாக இருந்த சமயம் அது. அப்போதுதான் அந்த எதிர்ப்பாராத சம்பவம் கலை முகிலனின் வாழ்வில் நடந்தது.

நமது கொப்பூழ் கொடி உறவுகள் இலங்கை மண்ணில் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார் கலை முகிலன். அதன் முழு விவரம் தெரியப்படாத நிலையில், மலேசியாவில் மிகக் கடுமையான சட்டமாகப் பார்க்கப்படும் சொஸ்மா சட்டத்தின்கீழ் கலை முகிலனைத் தீவிரவாதி எனச் சந்தேகத்தின் பெயரில் இன்னும் சிலருடன் கைது செய்தது காவல் துறை.

ஒரு தீவிரவாதியை எவ்வாறு கைது செய்வார்களோ, அவ்வாறே கலை முகிலன் கைது செய்து கொண்டு செல்லப்பட்டார்.

சட்டப்படி கைது செய்யப்பட்ட முதல் 28 நாள்கள் எந்தவித வெளித் தொடர்பும் கிடையாது. பத்துக்கு பத்து அறையில் மாதங்கள் பல செலவிடப்படும் என்பதைக் கலை முகிலன் சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. குடும்பத்தார், நண்பர்கள் என யாரையும் சந்திக்கவும் அனுமதி கிடையாது. அந்த நாள்களில் விசாரணை மட்டுமே நடக்கும்.

ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால், அந்த 28 நாள்கள் காலக்கட்ட இடையில்தான் தீபாவளியும் வந்தது.

கடவுளின் அணுக்கிரகமா அல்லது கலை முகிலனின் நல்ல நேரமா, யார் செய்த புண்ணியமோ, மலேசியாவில் முதன்முறையாக, சொஸ்மாவில் கைது செய்யப்பட்ட கலை முகிலனுக்கும் இன்னும் சிலருக்கும் ஒரு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது.

தீபாவளி நாளில், கைதாகி சிறையில் இருந்த அவர்கள், அருகில் இருக்கும், மாவட்டக் காவல் துறை அலுவலகத்தில் தங்கள் குடும்பத்தாரைச் சந்திக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. யாரும் எதிர்ப்பார்த்திடாத அறிவிப்புதான். ஆனால், தம்மால் அதனை முழுதாய் அனுபவிக்க முடியவில்லை என்று கலை முகிலன் குறிப்பிட்டார்.

தமது குடும்ப வழக்கப்படி, தீபாவளி நாளில் முன்னோர் வழிபாடு என்பது கலை முகிலனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் மிகவும் முக்கியமானதாகும். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தங்களின் முன்னோருக்குப் படையல் வைத்து வழிபடுவது கலை முகிலன் குடும்பத்தாரின் வழக்கமாகும்.

சொஸ்மாவில் கைது செய்யப்பட்டபோது, அடுத்த நொடி என்ன நடக்கப்போகிறது என்றே தெரியாத சூழல். அவ்வாறான நிலையில், கலை முகிலனை அவரது குடும்பத்தார் தீபாவளி நாளன்று சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது குறித்து தாம் வருத்தப்படுவதா அல்லது மகிழ்ச்சி அடைவதா என ஒரு தெளிவில்லா குழப்பத்தில் இருந்ததாக அவர் கூறினார்.

தீபாவளி முதன்மை காரணம் என்பதால், வீட்டில் இருந்து தீபாவளி உணவு சமைத்து எடுத்து வரவும் அதனைக் குடும்பத்தாருடன் சேர்ந்த உண்ணவும் கலை முகிலனுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சொல்லொன்னா துயரத்தில் இருந்த அவரது குடும்பத்தாருடன் கலை முகிலன் செலவிட வழங்கப்பட்ட நேரம் 20 நிமிடங்கள் மட்டுமே.

சொஸ்மாவில் கைது செய்யப்பட்ட கலை முகிலன் தடுப்புக் காவலில் இருந்து கோலாலம்பூர் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டார். யாரிடமும் எதுவும் பேசக்கூடாது என உத்தரவு. மேலும், தாம் எங்குக் கொண்டு செல்லப்படுகிறோம் எனவும் தெரிவிக்கப்படவில்லை. கண்கள் தெரியாமல் இருக்க முழுக் கருப்புக் கண்ணாடியைக் கலை முகிலன் அணியவும் கட்டளை.

காவற்படை கட்டுப்பாட்டுக்குள் கை விலங்குடன் ஒரு பெரிய வண்டியில் ஏற்றி இன்னோர் இடத்திற்குக் கொண்டு வரப்பட்டார்கள் கைது செய்யப்பட்டவர்கள். வந்து இறங்கியவுடன்தான் தெரிந்தது தற்போது அவர்கள் இருப்பது கோலாலம்பூர் காவல் நிலையத்தில் என்று. கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரும் தனித் தனியே ஓர் அறைக்குள் செல்ல உத்தரவு. அறையில் ஒரு சந்திப்புக் கூட்டத்திற்கான வட்டமேசை இருந்தது. ஏறத்தாழ 10 பேர்கள் வரை அமரலாம்.

அவர் சற்றும் எதிர்ப்பாராத சூழலில் கலை முகிலனின் குடும்பத்தார் அங்கு வந்தார்கள். தீபாவளி நாளன்று குடும்பத்தாரைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும்கூட, அங்கும் 4 காவல் துறை அதிகாரிகள் கலை முகிலனுடன் இருந்தார்கள்.

கலை முகிலனைச் சந்திக்க அவரது சித்தி, சிற்றப்பா, பெரியம்மா, பெரியப்பா, அவர்களின் பிள்ளைகள், மனைவி என வீட்டில் இருந்து சுமார் 8 பேர் வந்திருந்தார்கள். எதிர்ப்பாராத நிலையில் தமது குடும்பத்தாரைச் சந்திக்க இப்படி ஒரு வாய்ப்பை நினைத்து மகிழ்வதா அல்லது சிறைக் கைதியாக அவர்கள் முன்னிலையில் தாம் இருப்பதை நினைத்து கவலை கொள்வதா எனப் புரியாத மனநிலையில் கலை முகிலன்.

வீட்டில் செய்த தோசை, இட்டிலி, கோழிக் கறி, ஆட்டிறைச்சி குழம்பு எனப் பல உணவுகள் தமக்காகக் குடும்ப உறவுகள் கொண்டு வந்திருந்ததாகக் கலை முகிலன் தெரிவித்தார். இவ்வளவு நேரம்தான் சந்திக்க முடியும் எனத் தம்மிடம் காவல் துறை முன்கூட்டியே ஏதும் தெரிவிக்கவில்லை எனக் கூறும் கலை முகிலன், தாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே சந்திப்பு நேரம் முடிந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டதாகக் கூறினார்.

எப்படி தாம் கொண்டு வரப்பட்டோமோ, அதே மாதிரி மீண்டும் தடுப்புக் காவலுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் கலை முகிலன் சொன்னார்.

தாம் என்ன குற்றம் செய்தோம் என எதுவுமே இன்னும் முழுதாய் அறியப்படவில்லை. விசாரணை காலம் இன்னும் முடிவடையவில்லை. வழக்கு இன்னும் நீதிமன்றத்திற்குக்கூட செல்லவில்லை. இப்படி எதுவுமே இன்னும் முடிவு தெரியாத நிலையில், தீபாவளி காலத்தில் செய்யப்பட்ட கைது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருந்ததாகக் கலை முகிலன் தமது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டார்.
விசாரணை அனைத்தும் முறையாக முடிவடைந்து நீதிமன்றத்தில் தாம் நிரபராதி என உறுதிபடுத்திய பின்னர், தம் குடும்பத்தாருடன் மீண்டும் இணைந்த அந்த நொடிப் பொழுதை மறக்க முடியாது எனக் குறிப்பிடும் கலை முகிலன், தாம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஒட்டு மொத்தமாக 2 ஆண்டுகள் வரை ஆனது எனத் தெரிவித்தார்.

கடுமையான அந்தக் காலக் கட்டத்தை இன்று நினைத்தாலும் மனத்தை உலுக்குகிறதாகக் கூறும் கலை முகிலன், தாம் கடந்து வந்த அந்தக் கடுமையான பாதையை யாரும் அனுபவிக்கக்கூடாது எனவும் குறிப்பிட்டார்.

கண்ணிர் கலந்த அந்தச் சோக தீபாவளி என்றுமே மனதில் நீங்கா வலியை உணரச் செய்யும் ஒரு தீபாவளியாகவே தாம் பார்ப்பதாகக் கலை முகிலன் திசைகளிடம் பகிர்ந்து கொண்டார்.

WATCH OUR LATEST NEWS