இந்தியா, ஏப்ரல் 16-
முஷ்தாபிஜூர் ரஹ்மானுக்காக வரும் மே 1 ஆம் தேதி வரையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியத்திடம் சிஎஸ்கே மற்றும் பிசிசிஐ அனுமதி பெற்றுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் ரூ.2.20 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட முஷ்தாபிஜூர் ரஹ்மான், 2021 ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ரூ.1 கோடிக்கு இடம் பெற்றார். கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ரூ.2 கோடிக்கு விளையாடி வந்த முஷ்தாபிஜூர் ரஹ்மானை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
தற்போது நடைபெற்று வரும் 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற முஷ்தாபிஜூர் ரஹ்மான இந்த சீசனின் முதல் போட்டியிலிருந்து விளையாடி வருகிறார். இதுவரையில் சிஎஸ்கே விளையாடிய 6 போட்டிகளில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் 5 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 10 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். முதல் 3 போட்டிகளில் 7 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரருக்கான பர்பிள் கேப் பெற்றிருந்தார்.
ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 18ஆவது லீக் போட்டியில் அவர் இடம் பெறவில்லை. கடைசியாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் 4 ஓவர்கள் வீசி 55 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட் கைப்பற்றினார்.
இதுவரையில் அவர் இடம் பெற்று விளையாடிய 5 போட்டிகளில் 10 விக்கெட்டுகள் கைப்பறியுள்ளார். இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் கைபற்றியவர்களின் பட்டியலில் யுஸ்வேந்திர சஹால் 11 விக்கெட்டுகள், ஜஸ்ப்ரித் பும்ரா 10 விக்கெட்டுகள், முஷ்தாபிஜூர் ரஹ்மான் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியைத் தொடர்ந்து சிஎஸ்கே 19ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், 23 ஆம் தேதி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் (சென்னை மைதானம்), 28 ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (சென்னை) மற்றும் மே 1 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் என்று வரிசையாக 4 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில், முதல் போட்டியைத் தவிர மற்ற 3 போட்டிகளையும் ஹோம் மைதானத்தில் விளையாட இருக்கிறது.
இது குறித்து ஷஹ்ரியார் நஃபீஸ் கூறியிருப்பதாவது: முஸ்தாபிஸூருக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஐபிஎல்லில் விளையாடுவதற்கு அனுமதி அளித்திருந்தோம். ஆனால், 1ஆம் தேதி சென்னையில் போட்டி இருப்பதால், சென்னை மற்றும் பிசிசிஐயின் கோரிக்கையை ஏற்று அவரது அனுமதியை மேலும் ஒரு நாள் நீட்டித்துள்ளோம் என்று பிசிபியின் துணைத் தலைவர் தெரிவித்தார்.