இந்தியா, ஏப்ரல் 15-
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 29ஆவது லீக் போட்டியின் மூலமாக அதிவேகமாக 2000 ரன்களை கடந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் சாதனை படைத்துள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வருபவர் ருதுராஜ் கெய்க்வாட். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரின் 17ஆவது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது தலைமையிலான சிஎஸ்கே விளையாடிய 5 போட்டிகளில் 3ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. தற்போது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 29ஆவது ஐபிஎல் லிக் போட்டியில் விளையாடி வருகிறது.
இதில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது.
தொடக்க வீரர்களான அஜிங்கியா ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆரம்பத்தில் சொதப்பினாலும், ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஷிவம் துபே இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க சிஎஸ்கேயின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இந்த நிலையில் தான் இந்தப் போட்டியில் 46 ரன்கள் எடுத்திருந்த போது சிக்ஸர் விளாசி தனது 16ஆவது அரைசதத்தை பதிவு செய்தார். இதன் மூலமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிவேகமாக 2000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
அதுமட்டுமின்றி சச்சின் டெண்டுல்கர் மற்றும் கேஎல் ராகுல் சாதனையையும் முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக. ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2000 ரன்களை கடந்தவர்கள் (இன்னிங்ஸ்):
48 இன்னிங்ஸ் – கிறிஸ் கெயில்
52 இன்னிங்ஸ் – ஷான் மார்ஷ்
57 இன்னிங்ஸ் – ருதுராஜ் கெய்க்வாட்
60 இன்னிங்ஸ் – கேஎல் ராகுல்
63 இன்னிங்ஸ் – சச்சின் டெண்டுல்கர்
இறுதியாக அவர் 40 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 69 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே மற்றும் எம்.எஸ்.தோனியின் அதிரடியால் 206 ரன்கள் குவித்தது.