அதிரடி, அடாவடி காட்டிய பிலிப் சால்ட்

இந்தியா, ஏப்ரல் 30-

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக ஈடன் கார்டனில் நடைபெற்ற 47ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஈடன் கார்டன் மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் 47ஆவது லீக் போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பண்ட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய டெல்லி கேபிடல்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் எடுத்தது.

இதில், அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 35 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பவுலிங்கைப் பொறுத்த வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் வருண் சக்கரவத்தி 4 ஓவர்கள் வீசி 16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். வைபவ் அரோரா மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். மிட்செல் ஸ்டார்க் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

அதன் பிறகு பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். அவர், 26 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய பிலிப் சால்ட் 33 பந்துகளில் 7 பவுண்டரி, 5 சிக்ஸர் உள்பட 68 ரன்களில் ஆட்டமிழந்தார். சுனில் நரைன் 15 ரன்களில் ஆட்டமிழக்க, 3ஆவது வரிசையில் ரிங்கு சிங் களமிறக்கப்பட்டார். ஆனால், அவர் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்தப் போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றதன் மூலமாக விளையாடிய 9 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ஆவது இடத்திலுள்ளது. இதே போன்று இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த டெல்லி கேபிடல்ஸ் 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.

ஈடன் கார்டனில் இரு அணிகளும் மோதிய 10 போட்டிகளில் 8ல் கேகேஆரும், 2ல் டெல்லி அணியும் வெற்றி பெற்றுள்ளன. ஐபிஎல் கிரிக்கெட்டில் ஈடன் கார்டனில் நடந்த போட்டிகளில் அதிகபட்சமாக பிலிப் சால்ட் 6 இன்னிங்ஸ்களில் 344 ரன்கள் எடுத்துள்ளார் (இந்த ஆண்டு). இதற்கு முன்னதாக 2010 ஆம் ஆண்டு சவுரவ் கங்குலி (7 இன்னிங்ஸ் 331 ரன்கள்), 2019 ஆம் ஆண்டு ஆண்ட்ரே ரஸல் (7 இன்னிங்ஸ் 311 ரன்கள்), 2018 ஆம் ஆண்டு கிறிஸ் லின் (9 இன்னிங்ஸ் 303 ரன்கள்) எடுத்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS