இந்தியா, ஏப்ரல் 30-
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு ஒரு விக்கெட் கீப்பராக முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாகவும், ரிஷப் பண்டிற்கு 2ஆவது வாய்ப்பாகவும் சொல்லப்படுகிறது.
டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரானது வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான இந்திய அணியானது இன்னும் ஓரீரு நாட்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. ஆனால், அதற்குள்ளாக முதல் அணியானது டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட நியூசிலாந்து அணியானது அறிவிக்கப்பட்டது.
தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இதில், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும், யாருக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விக்கெட் கீப்பருக்கான ரேஸில் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கார் விபத்துக்கு பிறகு கிட்டத்தட்ட ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடாமல் இருந்த நிலையில் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடி வருகிறார். இவரது தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் இதுவரையில் விளையாடிய 9 போட்டிகளில் 5ல் வெற்றி கண்டுள்ளது. மேலும், புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.
ஸ்பின்னர்களை எதிர்கொள்ள கூடிய திறமை கொண்ட சஞ்சு சாம்சன் ஒரு விக்கெட் கீப்பராக அவருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், 2ஆவது சாய்ஸாக ரிஷப் பண்ட் இருக்கிறார். இதுவரையில் சாஞ்சன் விளையாடிய 9 போட்டிகளில் 4 அரைசதங்கள் உள்பட 385 ரன்கள் எடுத்துள்ளார். இதே போன்று ரிஷப் பண்ட் 3 அரைசதங்கள் உள்பட 371 ரன்கள் குவித்துள்ளார். எனினும், இறுதி முடிவு இன்னும் ஓரிரு நாட்களில் எடுக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.