இந்தியா, மே 03-
கிறிஸ் கெயில், ஸ்டாஃபனி டெய்லர், சந்தர்பால் ஆகியோர் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் இடம் பெற்றுள்ள டி20 உலகக் கோப்பைக்கான ஆந்தம் பாடலை ஐசிசி தற்போது வெளியிட்டுள்ளது.
ஜூன் 1 ஆம் தேதி முதல் ஜூன் 29 ஆம் தேதி வரையில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிரம்மாண்டமாக தொடங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகள் இணைந்து 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடரை நடத்துக்கின்றன. இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை என்று மொத்தமாக 20 அணிகள் பங்கேற்று 55 போட்டிகளில் விளையாடுகின்றன.
இந்த தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி வீரர்கள் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது டி20 உலகக் கோப்பைக்கான ஆந்தம் பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது. டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 30 நாட்கள் எஞ்சியிருக்கும் நிலையில் இசை மற்றும் விளையாட்டு இரண்டிலும் உள்ள முக்கிய பிரபலங்களின் ஒத்துழைப்புடன் போட்டியின் அதிகாரப்பூர்வ ஆந்தம் பாடலை ஐசிசி இன்று வெளியிட்டது.

கிராமி விருது பெற்ற கலைஞர் சீன் பால் மற்றும் சோகா சூப்பர் ஸ்டார் கேஸ் ஆகியோர் இணைந்து ‘அவுட் ஆஃப் திஸ் வேர்ல்டு’என்ற தலைப்பில் ஆந்தம் பாடலை உருவாக்கினர். மைக்கேல் “டானோ” மொன்டானோவால் இந்த ஆந்தம் பாடலானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆந்தம் பாடலானது அதன் இசை வீடியோவுடன் தொடங்கப்பட்டது. இந்த வீடியோவில் கிரிக்கெட் மற்றும் இசை பிரபலங்கள் பலரும் இடம் பெற்றுள்ளனர்.
எட்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற உசைன் போல்ட், வெஸ்ட் இண்டீஸ் ஜாமப்வான் கிறிஸ் கெய்ல், ஷிவ்நரைன் சந்தர்பால் மற்றும் ஸ்டாஃபனி டெய்லர் மற்றும் அமெரிக்காவின் பந்து வீச்சாளர் அலி கான் ஆகியோர் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளனர். கிராமி விருது பெற்ற சீன் பால் கூறுகையில், “கிரிக்கட்டைப் போன்று இசைக்கும் மக்களை ஒற்றுமையாகவும், கொண்டாட்டமாகவும் வைத்திருக்கும் ஆற்றல் உண்டு என்று நான் எப்போதும் நம்பினேன். இந்த ஆந்தம் பாடலானது, பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் வெஸ்ட் இண்டீஸின் பெருமை பற்றியது.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெ திருவிழா தொடங்கும் வரையில் என்னால் காத்திருக்க முடியாது. மேலும், ஒவ்வொருவரும் ஆந்தம் பாடலை பாடுவதை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் முழுவதும் கேளுங்கள். இது ஒவ்வொருவரையும் ஸ்டேடியங்களுக்கு அழைத்து வரும் என்று கூறியுள்ளார்.
இவரைத் தொடர்ந்து சோகா சூப்பர் ஸ்டார் கேஸ் கூறியிருப்பதாவது: “கிரிக்கெட் எப்போதுமே கரீபியன் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கான அதிகாரப்பூர்வ ஆந்தம் பாடலை எழுதுவதற்கும், பதிவு செய்வதற்கும் நான் பெருமைப்படுகிறேன். இந்த ஆந்தம் பாடலுக்கு உத்வேகம் அளித்த குழுவினருக்கு எனது பாராட்டுக்கள். மக்கள் ஒற்றுமையின் உணர்வைப் பாடுவதற்கு, அதனை உணர்வதற்கு இது உண்மையான கீதமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.