பூச்சோங் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடத்திற்கான நிர்மாணிப்புப்பணிகள், துரிதப்படுத்தப்படும்

பூச்சோங் , மே 09-

சிலாங்கூர், பூச்சோங் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டட நிர்மாணிப்புப்பணி, துரிதப்படுத்தப்படும் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி உறுதி அளித்துள்ளார்.

கட்டட நிர்மாணிப்பு பணி உட்பட இதர அங்கீகாரங்களை பெறும் நடைமுறையை சிலாங்கூர் அரசு துரிதப்படுத்தும் அதேவேளையில் இவ்விவகாரத்தில் போக்குவரத்து அமைச்சு காட்டும் வேகத்திற்கும், ஆற்றலுக்கும் ஏற்ப அடுத்த 24 முதல் 36 மாதங்களுக்குள் பள்ளி கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு விடும் என்று மந்திரி பெசார் அமிருடின் ஷாரி உறுதி அளித்துள்ளார்.

தேசிய வகை காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளி வீற்றிருக்கும் தற்போதைய நிலப்பகுதியில் எல். ஆர்.டி. ரயில் பாதை நிர்மாணிக்கம் திட்டம் விழுவதால், பள்ளியை இடம் மாற்றம் செய்வதற்கு மாற்று நிலம் பெற வேண்டியிருந்ததாக மந்திரி பெசார் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

வரலாற்றச் சிறப்புமிக்க காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளி, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள 6.1 ஏக்கர் நிலப்பரப்பில் 3 கோடி வெள்ளி செலவில் பள்ளியின் நான்கு மாடி புதிய கட்டடம் நிர்மாணிப்புக்கான அடிக்கல் நாட்டு விழாவை மந்திரி பெசார் அமிருடின் ஷாரி நேற்று மாலையில் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்துள்ளார்.

இப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா, உண்மையிலேயே இந்திய சமூகத்திற்கு ஒரு வரலாற்றுப்பூர்வமான தருணமாகும். காரணம், ஒரு தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடதிற்கான நிர்மாணிப்புப்பணி தொடங்கப்பட்டுள்ளது என்று அமிருடின் ஷாரி ஷாரி தனது முகநூல் பதிவேற்றத்தில் வர்ணித்துள்ளார்.

மத்திய மற்றும் மாநில அளவில் ஒரே எண்ணம் கொண்ட தலைமைத்துவத்தினால் மட்டுமே இது போன்ற திட்டங்கள் சாத்தியமாகும் என்று மந்திரி பெசார் குறிப்பிட்டார்.

காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடம், புதிய இடத்தில் நிர்மாணிக்கப்படும் விவகாரத்திற்கு தீர்வு காணும் வகையில் உரிய அர்ப்பணிப்புடன் முழு வீச்சில் செயல்பட்ட போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கிற்கு தமது நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

45 ஆசிரியர்கள் பணியாற்றும் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியில் 750 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி கற்பகம் கிருஷ்ணசாமி முன்னிலையில் நடைபெற்ற இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் இலக்கவியல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் நந்தகுமார் உட்பட பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS