மெலாக்கா, மே 10-
மெலாக்கா, அலோர் காஜா-வில் நேற்றிரவு மணி 8.30 வாக்கில், வாகனத்தில் தனது காதலியுடன் இருந்த போது, ரோந்து போலீஸ் வாகனம் திடிரென வந்ததால், 30 வயதுடைய ஆடவர் ஒருவர் பதற்றத்திற்கு உள்ளானார்.
எங்கே வாகனத்தினுள், தாங்கள் தவறான செயலில் ஈடுபட்டதாக நினைத்து, போலீஸ் தங்களை கைது செய்துவிடுமோ என அஞ்சிய அவர், போலீசிடமிருந்து தப்பிக்கும் வகையில், தனது பெரோடுவா மைவி வாகனத்தை அபாயகரமாக செலுத்தியுள்ளார்.
மஸ்ஜித் தானா-விலுள்ள பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலிருந்து பாயா லெபார் வரையில் சுமார் 14 கிலோமீட்டர் வரையில் அவ்வாடவர் வாகனத்தை செலுத்திய நிலையில், இறுதியில், வாகனம் ஆற்றினுள் பாய்ந்தது.
பின்னர், அவ்வாடவர் நீச்சல் அடித்தவாறு செபராங்-ங்கை நோக்கி தப்பித்துச் சென்றதாக, அலோர் காஜா மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் ஆஷாரி அபு சமா தெரிவித்தார்.
இதற்கிடையில், சம்பவ இடத்திற்கு வந்த போலிஸ், வாகனத்தை மீட்டு சோதணையிட்ட போது, அதில் 26 வயதுடைய பெண் ஒருவர் இருந்துள்ளார். அவர் காயங்களுக்கு ஏதும் இலக்காகவில்லை. சம்பந்தப்பட்ட வாகனத்தில், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் ஏதும் கிடைப்பெறவில்லை.
தப்பிச்சென்ற ஆடவர் மீது, போதைப்பொருள் தொடர்பான 3 முந்தைய குற்றப்பதிவுகள் உள்ளது முதல்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக, ஆஷாரி அபு சமா கூறினார்.