கோல குபு பாரு, மே 10-
கோல குபு பாரு சட்டமன்ற தொகுதிக்கான பரப்புரைகள், இன்றிரவு மணி 11.59க்கு நிறைவடையவுள்ள நிலையில், நாளை அத்தொகுதி வாக்காளர்கள் தங்களுக்கான பிரதிநிதியைத் தேர்தெடுக்கவுள்ளனர்.
பக்காத்தான் ஹாராப்பான், பெரிக்காதான் நசியனால், மலேசியா ரக்யாட் கட்சி ஆகியவற்றுடன் சுயேட்சை வேட்பாளர் ஒருவர் என மொத்தம் 4 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
இருப்பினும், பக்காத்தான் ஹாராப்பான்-னின் பாங் சாக் தாவோ, பெரிக்காதான் நசியனால்-லின் கைருல் அஸ்ஹரி சௌத் ஆகிய இரு வேட்பாளர்களுக்கு இடையில்தான் பலத்த போட்டி நிலவுவதாக கூறப்படுகின்றது.
இம்முறை அத்தொகுதியில், 40 ஆயிரத்து 226 பேர் தகுதி பெற்ற வாக்காளர்களாக உள்ளனர். அவர்களில், 39 ஆயிரத்து 362 பேர் பொது வாக்காளர்கள். ஒரு வாக்காளர் வெளிநாட்டில் உள்ளார்.
எஞ்சியவர்கள் பாதுகாப்பு படைகளான போலீஸ் மற்றும் இராணுவ உறுப்பினர்களும் அவர்களது துணைகளுமாவர். முன்கூட்டியே வாக்களிப்பில், அவர்கள் வாக்களித்துவிட்டனர்.
நாளை பொதுவாக்காளர்களே வாக்களிக்கவுள்ள நிலையில், வெற்றி வாய்ப்பை கணிக்க முடியாத சூழல் இன்னமும் நிலவிவருகின்றது. குறிப்பாக, 17 விழுக்காடாக இருக்கும் இந்திய வாக்காளர்களே வெற்றியை தீர்மானிப்பவர்களாக உள்ளதாக கூறப்படுகின்றது.