முதியவரிடம் கொள்ளையிட்ட முகமூடி திருடர்கள்

பகாங், மே 10-

பகாங், ஃபெல்டா சுங்கை தெக்காம் -மிலுள்ள வீடொன்றில் முகமூடி திருடர்கள் நுழைந்து, பெரியவர் ஒருவரை தாக்கியதுடன் 1,600 வெள்ளி மதிப்பிலான பொருட்களை கொள்ளையிட்டு சென்றனர்.

நேற்று இரவு 8 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 85 வயதுடைய அப்பெரியவரின் கைகள் ஒரு ரப்பர் குழாயால் கட்டப்பட்டதுடன் அவரின் வாயில் துணி அடைக்கப்பட்டு, படுக்கறைக்கு இழுத்து செல்லப்பட்டதாக தெரியப்படுகின்றது.

சந்தேகிக்கும் இரு முகமூடி திருடர்கள் வீட்டிற்குள் நுழைய முற்பட்ட வேளை, பாதிக்கப்பட்ட அப்பெரியவர் அவர்களை வழிமறித்ததை தொடர்ந்து இச்சம்பவம் நடந்திருப்பதாக மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் சுக்ரி முஹம்மது தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவரிடமிருந்து அந்த முகமூடி திருடர்கள் 1,200 வெள்ளி ரொக்கப்பணம், வங்கி அட்டைகள் உட்பட கைப்பேசிகளை கொள்ளையிட்டு சென்றதாக சுக்ரி முஹம்மது கூறினார்.

மேல் சிகிச்சைக்காக பாதிக்கப்பட்டவர் ஜெரான்டுட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதுடன் சம்பந்தப்பட்ட முகமூடி திருடர்களை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக சுக்ரி முஹம்மது அறிவித்தார்.

WATCH OUR LATEST NEWS