சக தோழியின் மீது எரிதிரவக வீச்சு நடத்தியதாக இந்திய மாணவி மீது குற்றச்சாட்டு

கிளாந்தான், மே 10-

தனக்கு நன்கு அறிமுகமான சக பல்கலைகழக மாணவி மீது எரிதிரவகம் வீச்சு நடத்தியதாக ஓர் இந்திய மாணவி கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் நேற்று குற்றச்சாட்டப்பட்டார்.

22 வயது ஆர். கீர்த்தனா நாயுடு என்கிற அந்த இந்திய மாணவி நீதிபதி நிக் ஹப்ரி முகமது முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அக்குற்றத்தை அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் அல்லது பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 326 ஆவது பிரிவின் கீழ் அம்மாணவி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

சக மாணவி மீது எரிதிரவகம் வீச்சு நடத்தியது மற்றும் தனது இருப்பிடமான ஜோகூரிலிருந்து எரிதிரவகத்தை கொண்டு வந்து தன் வசம் வைத்திருந்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் அம்மாணவிக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளன.

கடந்த மே 3 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 4.23 மணியளவில் கிளந்தான்,குபாங் கெரியன் -னில் உள்ள USM பல்கலைகழகத்தின், சுகாதார பிரிவு வளாகத்தில் பாதுகாப்பு இலாகா அறையில் 22 வயது நூருல் ஹுஸ்னா ரஹீம் என்பவர் மீது எரிதிரவக வீச்சு நடத்தியதாக அவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS