இந்தியா, மே 15-
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் வரும் 24 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கின்றனர்.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது. இதுவரையில் விளையாடிய 13 போட்டிகளில் 4ல் வெற்றியும், 9ல் தோல்வியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது.
மும்பையை தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அடுத்தடுத்து வெளியேறின. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. மும்பை அணியில் இடம் பெற்ற ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கின்றனர்.
ஜூன் 1 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் நடைபெறும் இந்த தொடருக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. இதில், ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டனர். ஆனால், நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இருவருமே ஃபார்மில் இல்லாத நிலையில் இருவருமே டி20 உலகக் கோப்பையில் விளையாட இருக்கின்றனர்.
இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஸ்காட்லாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, நேபாள், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், கனடா, ஓமன், பப்புவா நியூ கினியா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நமீபியா, உகாண்டா என்று மொத்தமாக 20 அணிகள் இடம் பெற்று விளையாடுகின்றன.
குரூப் ஏ பிரிவில் சுற்றில் இடம் பெற்றுள்ள இந்தியா மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். இதில், முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும். அதன்படி ஒவ்வொரு குரூப்பிலிருந்து மொத்தமாக 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.
இதில், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் புறப்படுகின்றனர். இவர்களுடன் இணைந்து சுப்மன் கில்லும் அமெரிக்கா புறப்பட்டுச் செல்ல இருக்கிறார். மேலும், பஞ்சாப் அணியில் இடம் பெற்றிருந்த அர்ஷ்தீப் சிங்கும் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார். பிளே ஆஃப் சுற்றுக்கு பிறகு மற்ற இந்திய அணி வீரர்கள் அமெரிக்கா செல்கின்றனர்.