சிங்கப்பூர், மே 23-
கடந்த மே 21 ஆம் தேதி லண்டனிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த கொண்டிருந்த சிங்கப்பூர் விமானம், நடுவானில் ஆட்டம் கண்ட சம்பவத்தில் காயமுற்ற மலேசியர்களில் மூவர் பேங்காக் மருத்துவமனையில் இன்னமும் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமிதிவேஜ் சுகும்விட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த மூவரின் நிலைமை உயிருக்கு ஆபத்தில்லை. தலை மற்றும் முதுகில் ஏற்பட் காயங்கள் காரணமாக அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது. சுயநினைவுடன் இருக்கும் அவர்களால் பேசமுடிகிறது என்று தாய்லாந்துக்கான மலேசியத் தூதர் ஜோஜி சாமுவேல் தெரிவித்துள்ளார்.
சிறு காயங்களுக்கு ஆளான மேலும் ஆறு மலேசியர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். 31 க்கும் 65 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரும் சமிதிவேஜ் சுகும்விட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தூதர் ஜோஜி சாமுவேல் குறிப்பிட்டுள்ளார்.