கோலாலம்பூர், மே 23-
இம்மாதம் முற்பகுதியில் கோலாலம்பூர், ஜாலான் சுலியன் இஸ்மாயில், கொன்கோர்ட் ஹோட்டல் அருகில் ராட்ஷச மரம் விழுந்த சம்பவத்தில், மோனோ ரயிலை மிக சமார்த்தியமாக நிறுத்தி, பலரின் உயிரை காப்பாற்றிய அந்த ஓட்டுநர் கேப்டன் ஜாஹிருதீன் நோர்டின் இன்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்கினானால் வெகுவாக பாராட்டப்பட்டு, பாராட்டுப்பத்திரமும், நற்சான்றிதழும் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மே 7 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் பலத்த காற்று மற்றும் கனத்த மழையில் அந்த ராட்ஷச மரம் வேரோடு பெயர்த்துக்கொண்டு, மோரோ ரயில் வழித்தடத்தில் விழுந்ததில் அதன் தண்டாவாளப்பாதை சேதமுற்றது.
இந்நிலையில் தனது ஆழ்ந்த விழிப்பு நிலையினால் இருப்புப்பாதையில் மரம் விழுந்து கிடப்பதை தூரத்திலேயே கண்டு ரயிலை துரிதமாக நிறுத்துவதில் வெற்றிக்கண்டது மூலம் கேப்டன் ஜாஹிருதீன் நோர்டின் சுமார் 30 பேரின் உயரரை காப்பாற்றியதாக அந்தோணி லோக் புகழ்மாலை சூட்டினார்.