கோலாலம்பூர், மே 23-
அரச மலேசிய சுங்கத்துறையில் 200 கோடி வெள்ளி இழப்பு ஏற்படும் அளவிற்கு வரிப்பணத்தை கசியவிட்ட அதன் அதிகாரிகள் உட்பட 23 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM, வளைத்துப் பிடித்துள்ளது.
அரசாங்கத்தற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் அளவிற்கு மிக தந்திரமாக செயல்பட்டதாக நம்பப்படும் 23 சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் தனிநபர்கள், SPRM தொடங்கிய OPS SAMBA 2.0 எனும் மாபெரும் கைது நடவடிக்கையின் மூலம் பிடிபட்டுள்ளனர்.
இந்த 23 பேரும், 2009 ஆண்டு மலேசிய ஊழல் தடுப்புச் சட்டம் உட்பட மேலும் பலவேறு சட்ட சட்டங்களின் வாயிலாக இப்போது தொடங்கி, வரும் ஜுன் மாதம் 6 ஆம் தேதி வரையில் நாடு தழுவிய நிலையில் 6 வெவ்வேறு செஷன்ஸ் நீதிமன்றங்களில் குற்றஞ்சாட்டப்படுவார்கள் என்று SPRM இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சரக்கு வரி ஏமாற்றப்பட்டது தொடர்பில் சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் கார்கோ முனையத்தில் பணியாற்றும் சுங்கத்துறை அதிகாரிகளை இலக்காக கொண்டு கடந்த மார்ச் 11 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை SPRM விசாரணை மேற்கொண்டதன் விளைப்பயனாக OPS SAMBA 2.0 மூலமாக மொத்தம் 34 சுங்கத்துறை அதிகாரிகளும், 27 தனிநபகர்களும் கைது செய்யப்பட்டனர் என்று அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட மதுபான வகைகள், மற்றும் சிகரெட்டுகளுக்கு வரி விதிக்காமல் கடத்தல் கும்பல்களுடன் கூட்டு சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள் வரியை கசியவிட்டு, மோசடி செய்துள்ளனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் உட்பட இந்த கும்பல் வளைத்துப்பிடிக்கப்பட்டது மூலம் அவர்களின் எட்டு ஆடம்பர கார்கள், கைப்பேசிகள் மற்றும் இதர உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒரு கோடியே 80 லட்சம் வெள்ளி மதிப்புள்ள 231 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.