ஆக்ரோஷம், கொண்டாட்டத்தினால டிராபியை ஜெயிக்க முடியாது

இந்தியா, மே 24-

ஆக்ரோஷமாக இருப்பதினாலயோ, கொண்டாட்டத்தினாலயோ ஐபிஎல் டிராபியை ஜெயிக்க முடியாது என்று அர்சிபி வீரர்களை சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விமர்சனம் செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி ஆர்சிபி முதலில் விளையாடியது. பெங்களூருவில் 218 ரன்கள் குவித்த ஆர்சிபி அணியால் இந்தப் போட்டியில் ரன்கள் குவிக்க முடியவில்லை.

கடைசி வரை நிதானமாக விளையாடி 172 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ரன்கள் எடுத்தார். மகிபால் லோம்ரார் 32 ரன்கள் எடுத்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 173 ரன்கள் எடுத்தால் 2ஆவது தகுதிச் சுற்றுக்கு செல்லும். இல்லையென்றால் தொடரிலிருந்து வெளியேறும் என்ற நிலையில் விளையாடியது.

அதன்படி யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோஹ்லர் காட்மோர் இருவரும் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். காட்மோர் 20 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் 45 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் பொறுப்பை உணர்ந்து ஆடாமல் இறங்கி அடிக்க முயற்சித்து ஸ்டெம்பிங்கில் ஆட்டமிழந்தார். அவர் 17 ரன்கள் ஆட்டமிழந்தார்.

துருவ் ஜூரெல் 8 ரன்னிலும், ரியான் பராக் 36 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதன் மூலமாக ஆர்சிபிக்கு கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி வாய்ப்பு வந்தது. அடுத்து வந்த ஷிம்ரன் ஹெட்மயர் 26 ரன்கள் எடுத்துக் கொடுக்க கடைசியில் ரோவ்மன் பவல் வந்து அதிரடியாக 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2ஆவது தகுதிச் சுற்று போட்டிக்கு சென்றது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த அர்சிபி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. இதுவரையில் ஒரு முறை கூட டிராபியை கைப்பற்றாத ஆர்சிபி இந்த முறை டிராபியை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், 17ஆவது சீசனிலும் டிராபி இல்லை என்ற வேதனையுடன் நடையை கட்டியுள்ளது. கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆர்சிபி எலிமினேட்டர் சுற்றுடன் வெளியேறியது. 2022 ஆம் ஆண்டு குவாலிஃபையர் 2ஆவது சுற்றுடன் வெளியேறியது. கடந்த ஆண்டு 6ஆவது இடம் பிடித்த ஆர்சிபி இந்த ஆண்டு பிளே ஆஃப் வந்து எலிமினேட்டர் சுற்றில் விளையாடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பரிதாபமாக வெளியேறியது.

இந்த நிலையில் தான் ஆர்சிபியின் தோல்வி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: ஆக்ரோஷத்தினாலும், கொண்டாட்டங்களினாலும் டிராபி வெல்லப்படுவதில்லை. அதற்கு சிஎஸ்கே அணியை மட்டும் வீழ்த்தினால் போதாது. பிளே ஆஃப் சுற்றுகளிலும் சிறப்பாக விளையாட வேண்டும். அப்படி விளையாடினால் தான் டிராபியை கைப்பற்ற முடியும் என்று கூறியுள்ளார்.

ஆர்சிபியின் தோல்வியை சிஎஸ்கே வீரர்கள் தாறுமாறாக கொண்டாடி வருகின்றனர். பட்டாசு வெடித்தும், மீம்ஸ் உருவாக்கியும் கொண்டாடி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பெங்களூருவில் நடைபெற்ற 68ஆவது லீக் போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்தி ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது. அப்போது ஆர்சிபி வீரர்கள் அதிகளவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சிஎஸ்கே ரசிகர்களை விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS