பெட்டாலிங் ஜெயா, மே 27-
ஒவ்வோர் ஆண்டும் மெட்ரிகுலேஷன்-னில் கல்வி பயில வாய்ப்பளிக்கப்படாமல் வதைப்படும் கொடுமை, 2023ஆம் ஆண்டுக்கான SPM தேர்வில் சிறந்த தேர்ச்சியைப் பெற்றுள்ள இந்திய மாணவர்களுக்கும் இம்முறை ஏற்பட்டுவிடக்கூடாது.
அதனை உறுதிபடுத்த அக்கல்வி கழகத்தில் தகுதி வாய்ந்த இந்திய மாணவர்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என செனட்டர்களான டாக்டர் ரா லிங்கேஸ்வரன், சி சிவராஜ் ஆகிய இருவரும் வலியுறுத்தியுள்ளனர்.
இன்று வெளியாகியுள்ள SPM தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, மெட்ரிகுலேஷன் கல்லூரிகளில் பயில்வதற்கான விண்ணப்பங்கள் விரைவில் திறந்துவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த சில மாதங்களில் அதற்கான முடிவுகளும் வெளியிடப்படும்.
இந்நிலையில், சிறந்த தேர்ச்சியைப் பெற்றும் இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன்-னில் இடம் மறுக்கப்பட்டு, அவர்கள் மேல்முறையீடுகளை செய்கின்ற கொடுமை வேதனையளிப்பதாக டாக்டர் ரா லிங்கேஸ்வரன் கூறினார்.
தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு, கல்வி அல்லது உபகாரச்சம்பளத்தை பெறுவதற்கான உரிமை மறுக்கப்படக்கூடாது. நடப்பு ஒற்றுமை அரசாங்கம், இனம் அடிப்படையில் எந்தவொரு மாணவர்களின் உரிமையையும் மறுக்கக்கூடாது என்றாரவர்.
இதனிடையே, அதிகம் பின் தங்கியுள்ள இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கத்தின் உதவிகள் தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டிய சி சிவராஜ், இந்திய மாணவர்களுக்கு ஈராயிரத்து 500 இடங்களை ஒதுக்கீடு செய்து, கூட்டரசு அரசாங்கம் அதன் கடந்த கால தவற்றை சரி செய்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தினார்.
ஒவ்வோர் ஆண்டும் மெட்ரிகுலேஷன் முடிவுகள் வரும் போது, இந்திய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. அதற்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதற்கு முற்றுப்புள்ளியை வைக்க வேண்டும்.
கடந்த 2017ஆம் ஆண்டில், இந்திய மாணவர்களுக்கு ஆயிரத்து 600 இடங்களை வழங்கிய அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், அதற்கு மறு ஆண்டு ஈராயிரத்து 200 இடங்களை வழங்க ஒப்புக்கொண்டிருந்தார்.
ஆனால், தற்போது, அவ்வெண்ணிக்கையைக் காட்டிலும் குறைந்த இடங்களே இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படுகின்றன.
இந்நாட்டில், அனைத்து இனங்களுக்கும் நியாயமான உபசரணையும் உரிமையையும் வழங்கப்பட வேண்டும். கோல குபு பாரு இடைத்தேர்தலைப் போன்று, இந்திய சமூகத்தின் ஆதரவை, தேர்தலுக்காக மட்டுமே பெற பிரதமர் முயற்சிக்கக்கூடாது எனவும் சி சிவராஜ் கேட்டுக்கொண்டார்.