இந்தியா, மே 30-
இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளரை தேடும் முயற்சியில் இறங்கியுள்ள பிசிசிஐ கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகரான கவுதம் காம்பீரை தேர்வு செய்ய இதுதான் சரியான சந்தர்ப்பம்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் இன்னும் ஒரு மாதத்தில் முடிவடைகிறது. ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரையில் நடைபெறும் 9ஆவது டி20 உலகக் கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து அடுத்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
மீண்டும் விண்ணப்பிக்க ராகுல் டிராவிட் மறுப்பு தெரிவித்திருக்கிறார். விவிஎஸ் லட்சுமணன் நிராகரித்திருக்கிறார். இதையடுத்து தன்னிடம் பிசிசிஐ தரப்பிடமிருந்து பேசப்பட்டதாக ரிக்கி பாண்டிங் கூட, பிசிசிஐ எந்த ஆஸ்திரேலிய வீரர்களிடம் பேசவில்லை என்று திட்டவட்டமாக கூறியது.
பாண்டிங்கைத் தொடர்ந்து ஸ்டீபன் ஃபிளெமிங்கிடம் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல் வந்ததது. இவர்கள் தவிர கவுதம் காம்பீரும் பயிற்சியாளருக்கான ரேஸில் இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் தான் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளருக்கு தற்போது கவுதம் காம்பீர் சரியான தேர்வாக இருப்பார்.
ஏனென்றால், நடந்து முடிந்த ஐபிஎல் 2024 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் காம்பீர் கேகேஆர் டிராபி வாங்க முக்கிய காரணமாக இருந்துள்ளார். கவுதம் கம்பீர் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் கூட்டணியில் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 3ஆவது முறையாக டிராபியை வென்றுள்ளது.
அதுமட்டுமின்றி கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து அடுத்தடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சீசனில் கொல்கத்தா அணியை சாம்பியனாக்கியுள்ளார். ஆதலால், இன்னும் ஒரு மாதத்திற்குள்ளாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.