கெடா, பாலிங், கம்போங் குவார் செம்பெடாக்கில் கன்றுக்குட்டியை விழுங்க முயற்சி செய்த ராட்ஷச மலைப்பாம்பு ஒன்றை பொது தற்காப்பு படையினர் மிக லாவகமாக பிடித்தனர்.
இச்சம்பவம் நேற்று நள்ளிரவு 12.05 மணியளவில் நிகழ்ந்தது. மூன்று மீட்டர் நீளமுள்ள 40 கிலோ எடை கொண்ட அந்த மலைப்பாம்பு, தனக்கென உரித்தான பாணியில் சத்தமே இல்லாமல் அந்த கன்றுக்குட்டியின் காலை கவ்விய நிலையில், அதன் உடலையும் சுற்றிக்கொண்டது.
மலைப்பாம்பின் கோரப்பிடியில் சிக்கிய கன்றுக்குட்டி, திமிற முடியாமல், உடல் சிறுத்து மெலிதானது. அப்போது அதனை விழுங்க மலைப்பாம்பு தொடங்கியது. அதனைப் பார்த்து விட்ட குடியிருப்புவாசிகள் பொது தற்காப்பு படையினருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொது தற்காப்புப் படையினர் அந்த மலைப்பாம்பை பிடிக்க முயற்சித்த போது அந்த ராட்ஷச ஊர்வனம், தான் விழுங்கிய கன்றுக்குட்டியை வெளியே கக்கியதில் அது இறந்த நிலையில் மீட்கப்பட்டதாக அதன் பேச்சாளர் தெரிவித்தார்.