நடந்து முடிந்த இந்தியாவின் மக்களவைத் தேர்தலில் தமது தலைமையிலான பாரதிய ஜனதா கூட்டணி வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கவிருக்கும் நரேந்திர மோடிக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.
நரேந்திர மோடி வரும் ஜுன் 8 ஆம் தேதி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், மலேசியா சார்பில் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக முகநூலில் தெரிவித்துள்ளார்.
உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 64 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்களித்து, தங்களின் ஜனநாயக கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் அன்வார் புகழாரம் சூட்டினார்.
இந்தியாவிற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கவிருக்கும் நரேந்திர மோடி, இந்தியப் பொருளாதாரத்தில் ஓர் ஊக்கமூட்டும் மாற்றத்தை கொண்டு வந்த தலைவர் ஆவார்.
மோடி ஏற்படுத்திய இந்த மாற்றமும், நடப்பு வெற்றியும் நிச்சயம் மக்களின் நல்வாழ்வை மேம்படுத்தும் என்பதுடன் பிராந்தியத்திற்கு நன்மைகளை கொண்டு வரும் என்று டத்தோ ஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
மலேசியாவுக்கும், இந்தியாவிற்கும் இடையிலான நீடித்த உறவை வலுப்படுத்த மோடியுடன் இணைந்து தமது பங்களிப்பையும், ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தமது விருப்பத்தை முகநூலில் தெரிவித்துள்ளார்.
மூன்றாவது முறையாக பிரதமராகும் இந்த மகத்தான வெற்றியின் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவில் வரலாற்றுமிக்க சாதனையைப் படைத்த முதல் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார் என்று டத்தோஸ்ரீ அன்வார் புகழாரம் சூட்டினார்.