ஜோகூர் மாநில இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் – மின் உடன் செல்லும் மெய்க்காவலர்களில் ஒருவரால் மாற்றுத் திறனாளி தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இதுவரையில் 12 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியிருப்பதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
இ-ஹைலிங் ஓட்டுநரான அந்த மாற்றுத் திறனாளி, அவரை தாக்கியதாக கூறப்படும் சந்தேகப் பேர்வழி, சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படும் ஹோட்டலின் பணியாளர்கள், ஜோகூர் இடைக்கால சுல்தானின் வாகன ஓட்டநர், ஒரு மருத்துவர் மற்றும் போலீஸ் சிறப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஆகியோர் விசாரணை நடத்தப்பட்டவர்களில் அடங்குவர் என்று ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள புகார்தாரர், தனது புகாரை மீட்டுக்கொள்வதாக அறிவித்த போதிலும், நடைபெற்ற விசாரணைகளை அடிப்படையாக கொண்டு பார்க்கையில் சம்பந்தப்பட்ட புகார்தாரர் இந்த வழக்கை தொடர்வதற்கு ஆர்வமாக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது என்று டான்ஸ்ரீ ரஸாருதீன் தெரிவித்தார்.