கோலாலம்பூர், ஜூன் 06-
கோலாலம்பூர்-ரிலுள்ள ஒரு தங்கும் விடுதியில், உடற்பேறு குறைந்த EHAILING ஓட்டுநரை தாக்கிய போலீஸ் உறுப்பினரிடம், அரச மலேசிய போலீஸ் படையின் தர நிர்ணய கட்டுப்பாடு மற்றும் உயர்நெறி துறை – JIPS, விசாரணையை மேற்கொண்டு வருவதாக அதன் இயக்குநர் டத்தோஸ்ரீ அஸ்ரி அஹ்மத் தெரிவித்தார்.
விசாரணைக்கு உதவும் நோக்கில், தாக்குதலுக்கு இலக்காகியிருந்த 46 வயது ஓங் இங் கியாங் எனும் ஓட்டுநர், அவரது வழக்கறிஞர் மற்றும் மொழிப்பெயர்ப்பாளருடன், நேற்று காலை மணி 11 அளவில் புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட போலீஸ் உறுப்பினர், பணியின் போது, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை மீறி தவறாக நடந்துக்கொண்டுள்ளாரா என்பதைத் தங்கள் தரப்பு ஆராயவுள்ளது.
தற்போது விசாரணை தொடக்கக்கட்டத்தில் உள்ளதால், அதனை நிறைவு செய்ய, இன்னும் அதிகமான சாட்சியாளர்கள் அழைக்கப்படுவார்கள்.
பாதிக்கப்பட்டவருக்கு நியாயம் கிடைக்க, விசாரணை முற்றிலும் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் என அஸ்ரி அஹ்மத் உறுதியளித்தார்.