கோலாலம்பூர், ஜூன் 12-
மலேசிய தமிழ் நாடகத்துறை முன்னோடிகளில் ஒருவரும், நூற்றுக்கும் மேற்பட்ட புதுமுகங்களை தொலைக்காட்சித் தொடர்களில் அறிமுகப்படுத்தியவரும், பிரபல இயக்குநருமான K. விஜயசிங்கத்தின் மறைவு, நாட்டின் கலைத்துறைக்கு பேரிழப்பாகும் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் கே. விஜயசிங்கம், இன்று அதிகாலையில் தமது 78 ஆவது வயதில் காலமானார். கோலாலம்பூர், செந்தூலில் பிறந்து வளர்ந்தவரான விஜயசிங்கம், சிறு வயது முதல் கலைத்துறையில் கொண்டு இருந்த ஆர்வத்தின் காரணமாக 60 ஆம் ஆண்டுகளில் அவரின் கலைப் பயணம் தொடங்கியது.
1963 ஆம் ஆண்டில் தொலைக்காட்சி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த விஜயசிங்கம், அந்நாளில் மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட “இன்ஸ்பெக்டர் சேகர்” தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 1970 ஆம் ஆண்டு வரை பல நாடகத் தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.
விஜயசிங்கத்தின் கைவண்ணத்தில் 1973 ஆம் ஆண்டு “இணைந்த கரங்கள்”, 1975 ஆம் ஆண்டில் “ராதைக்கேற்ற கண்ணன்” போன்ற மேடை நாடகங்களையும், 2018 ஆம் ஆண்டில் “சாணக்கிய சபதம்” நாடகத்தையும் மேடையேற்றிய பெருமையும் இவருக்கு உண்டு.
“ காதல் அது ரகசியம்” என்ற திரைப்படைத்தையும் விஜயசிங்கம் தயாரித்துள்ளார். தனது சகோதரர் கருணாநிதியுடன் இணைந்து TVB, / Kini Graphic போன்ற தயாரிப்பு நிறுவனங்களை இருபது ஆண்டுகளுக்கு மேலாக நடத்தி வந்துள்ளார்.
ஜாலான் நடசுரா, நடரியா போன்ற RTM, தொலைக்காட்சி வாரப் படைப்புகளை ப்ரோ மெஜஸ்டிக் டத்தோ சந்திரசேகர் சுப்பையாவிற்காக தயாரித்து இயக்கி தந்துள்ளார். தன் சகோதரரின் மறைவிற்கு பிறகு தன் புதல்வர்களைக் கொண்டு பிலிம் ஸ்டேஷன் எனும் நிறுவனத்தை இயக்கி வந்தார்.
டெலிமூவி, தொடர் நாடகங்கள், தீபாவளி, பொங்கல், சிறப்பு நிகழ்ச்சிகள் என விஜயசிங்கத்தின் ஐநூற்றுக்கு மேற்பட்ட கலைப்படைப்புகள் தொலைக்காட்சியில் ஒளியேறியுள்ளன.
நடிகர், இயக்குநர்,வசனகர்த்தா, எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர், தயாரிப்பு நிறுவன உரிமையாளர் /என பன்முகம் கொண்டு மலேசிய கலையுலகியல் தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் மறைந்த விஜயசிங்கம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டு, அவரின் மேன்மையையும், புகழையும் பரப்பும் அயராத பணியை ஒரு குட்டித்தூதுவரைப் போல் செய்து வந்தவர் விஜயசிங்கம்
கலைஞர் சிவாஜி ராஜாவிற்கு பிறகு மலேசிய சிவாஜி கலைமன்றத்திற்கு தலைவராக பொறுப்பு ஏற்று, மலேசிய சிவாஜி மன்றத்தின் ஆண்டு விழாக்களில் சிவாஜி விருது வழங்கி வந்த பெருமை விஜயசிங்கத்தையே சேரும்.
இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் நமது நாட்டிற்கு வருகை தந்த போது, அவருடன் மலேசிய கலைஞர்கள் கலந்துரையாடும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தவர் விஜயசிங்கம்.
மறைந்த மெ. அறிவானந்தன், வானம்பாடி பாலு, மெல்லிசை மன்னர் ரெ. சண்முகம், P.K. சாமி, மறைந்த பெண் பத்திரிகையாளர் வில்வமலர் ஆகியோரை திரைக்கதை வசனகர்த்தாவாக்கிய பெருமையும் விஜயசிங்கத்தையே சேரும்.
மலேசிய கலைத்துறைக்கு அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட கே. விஜயசிங்கம், கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட படைப்புகளை மலேசிய கலைத்துறைக்காக விட்டு சென்றுள்ளார்.
அன்னாரின் நல்லடக்கச் சடங்கு நாளை ஜுன் 13 ஆம் தேதி நண்பகல் 12 க்கும் பிற்பகல் 2 க்கும் இடைப்பட்ட நேரத்தில் எண், 29,ஜாலான் பெர்டானா 2/28. தாமான் பண்டான் பெர்டானா, கோலாலம்பூர் என்ற முகவரியில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.