அமெரிக்கா, ஜூன் 12-
இந்திய அணிக்கு பீல்டிங் பயிற்சியாளர் வித்தியாசமான முறையில் பயிற்சி கொடுத்த நிலையில், விராட் கோலி அண்ட் கோ அதில் வெற்றி கண்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை தொடரானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா விளையாடிய அயர்லாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த போட்டிகளைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கனடா அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடுகிறது.
இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி நியூயார்க்கில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தான் இந்தப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளர் திலீப் இந்திய அணி வீரர்களுக்கு டிரில் பயிற்சி கொடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அதில், இந்திய அணி வீரர்கள் ஐந்து ஐந்து வீரர்களாக 3 பிரிவுகளாக பிரிந்து டிரில் பயிற்சி எடுத்தனர். இதில், வாட்டர் பாட்டில் முதல் கால்பந்து வரை பல்வேறு இலக்குகளை இலக்குகளாக கொண்டுள்ளனர்.
ரோகித் சர்மா அணியில் ரிஷப் பண்ட், குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றனர். இதே போன்று விராட் கோலி அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம் பெற்றனர். அர்ஷ்தீப் சிங் அணியில் ரவீந்திர ஜடேஜா, சஞ்சு சாம்சன், ஜஸ்ப்ரித் பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம் பெற்றனர்.
ஒரு குறிப்பிட்ட தூரத்தில் வாட்டர் பாட்டில், கால்பந்து உள்ளிட்டவற்றை வைத்து அதனை குறி பார்த்து எறிய வேண்டும். இந்த டிரில் பயிற்சியில் விராட் கோலி அணி வெற்றி பெற்றுள்ளது. இதில், ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, யஷஸ்வி ஜெஸ்வால் ஆகியோர் சரியாக எறிந்து வெற்றி பெற்றுள்ளனர்.