பாகிஸ்தானுக்கு எதிராக மோசமாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் – 5 போட்டிகளில் 64 ரன்கள், அதிகபட்சமே 18 ரன்னு!

அமெரிக்கா, ஜூன் 11-

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதுவரையில் விளையாடிய 5 போட்டிகளில் மொத்தமாக சூர்யகுமார் யாதவ் 64 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான 19ஆவது போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

முதலில் விளையாடிய இந்திய அணியானது ரிஷப் பண்டின் அதிரடியால் 119 ரன்கள் குவித்தது. ரிஷப் பண்ட் 42 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். அக்‌ஷர் படேல் 20 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா 13 ரன்களும், அர்ஷ்தீப் சிங் 9 ரன்களும் எடுத்தனர். பின்னர் எளிய இலக்கை துரத்திய பாகிஸ்தான் வெற்றி பெற்றுவிடும் என்று ஒவ்வொரு ரசிகரும் எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஆனால், ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியவாவின் அபாரமான பந்து வீச்சால் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்தது. பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் மட்டுமே அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். பாபர் அசாம், உஸ்மான் கான், ஃபகர் ஜமான் ஆகியோர் தலா 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இமாத் வாசீம் 15 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். நசீம் ஷா 10 ரன்கள் எடுத்தார். பவுலிங்கைப் பொறுத்த வரையில் இந்திய அணியில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அக்‌ஷர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் கைப்பற்றினர்.

இந்த நிலையில் டி20 கிரிக்கெட்டின் நம்பர் 1 வீரரான சூர்யகுமார் யாதவ் இந்தப் போட்டியில் 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார். இதுவரையில் பாகிஸ்தானுக்கு எதிராக 5 போட்டிகள் மட்டுமே விளையாடியுள்ளார். இந்த 5 போட்டிகளில் முறையே 11, 18, 13, 15 மற்றும் 7 ரன்கள் என்று மொத்தமாக 64 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக நடைபெற்ற அமெரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் சூர்யகுமார் யாதவ் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்துள்ளார். ஐபிஎல் தொடர் முதல் சூர்யகுமார் யாதவ் தனது மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வருகிறார். இதே நிலையில் அவர் விளையாடி வந்தால் வாய்ப்பு மறுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS