கோலாலம்பூர், ஜூன் 12-
இஸ்லாத்தை தழுவுவதற்கு ஆர்வம் கொண்டுள்ள முஸ்லிம் அல்லாத மாணவர்களை, ரகசியமான முறையில் எவ்வாறு மதம் மாற்றுவது என்பது தொடர்பாக விளக்கம் அளித்த சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஃபிர்தௌஸ் வோங்- குறித்து அரசியல் தலைவர்கள் வாய்த்திறக்காமல் இருப்பது தொடர்பில் DSK எனப்படும் Dinamik Sinar Kasih Malaysia சமூக நல அமைப்பின் தலைவரும் ஆலோசகருமான டத்தோ N. சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதம், இனம், நாடு என்ற வேறுபாடியின்றி பெரும் பெருந்திரளான கூட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசுகின்றவர்கள், தங்கள் வாதத்தை முன்வைப்பதற்கு முன்பு அது குறித்து ஏன் முழுமையாக ஆராய மறுக்கின்றனர் என்று டத்தோ சிவகுமார் கேள்வி எழுப்பினார்.
18 வயதுக்கு உட்பட்ட ஒருவரின் மதம் குறித்து அவரின் பெற்றோர்களான தந்தையும், தாயாரும் இணைந்தே முடிவு எடுக்க வேண்டுமே தவிர அவர்களின் ஒருவர் தீர்மானிப்பது செல்லப்படியாகாது என்று இந்திராகாந்தி வழக்கில் 2018 ஆம் ஆண்டில் கூட்டரசு நீதிமன்றம் மிகத் தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளது.
அதேவேளையில் மதம் மற்றும் இனம் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் கருத்து வெளியிடும் போது தீவிரத் தன்மை வேண்டாம் என்று மாமன்னர் வழங்கிய அறிவுறுத்தலை மலேசியர்கள் சிலர் ஏற்காதது வருத்தம் அளிக்கிறது.
இருப்பினும், நாட்டின் பொது ஒழுங்கு, நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை பாதிக்கக்கூடிய விஷயங்களில் தலைவர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்பது அர்த்தம் அல்ல.
இன ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக அரசியவாதிகள் குரல் கொடுக்க வேண்டும் என்று டத்தோ சிவகுமார் வலியுறுத்தினார். காரணம், அவர்களின் நம்பிக்கைதான் மக்களாகும்.
அதேவேளையில் தனது e-Sepakat வாயிலாக தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சு இவ்வாண்டு முதல் காலாண்டில் 123 புகார்களை பெற்றுள்ளன. இவற்றில் 47 சம்பவங்கள் இன மற்றும் மத வேறுப்புணர்வை தூண்டக்கூடிய 3 R விவகாரமாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.
அமலாக்கத் தரப்பினர் மக்களின் புகார்களுக்காக காத்திருக்காமல் 3R விவகாரத்தை தொடக்கூடிய எந்தவொரு தரப்பினரும் மீதும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று டத்தோ சிவகுமார் கேட்டுக்கொண்டார்.
ஒவ்வொரு தனிமனிதரும் இந்த நாட்டில் மத சுதந்திரத்தைப் புரிந்து கொண்டு மதிக்கும் மாண்பு வேண்டும். அனைத்து தரப்பினரும் ஒருவரையொருவர் மதிக்கத் தொடங்கினால் மலேசிய மடானி சமூகத்தில் இனவெறி என்ற துவேஷம் குறையும். பிரச்னைகளும் மேலோங்க வேண்டிய அவசியம் இராது என்று டத்தோ சிவகுமார் வலியுத்தினார்.