பிரதமர் அன்வாரை ஆதரித்த 6 நாடாளுமன்றஉறுப்பினர்களும் பெர்சத்து- விலிருந்து நீக்கம்

கோலாலம்பூர், ஜூன் 12-

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு தங்களின் ஆதரவை வழங்கிய டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சியின் 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்பினர் தகுதியிலிருந்து உடனடியாக நீக்கப்பட்டதற்கான நோட்டீஸ் இன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜுன் 7 ஆம் தேதி பெர்சத்து கட்சியின் உச்சமன்றக்கூட்டம் எடுத்துள்ள முடிவிற்கு ஏற்ப அந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இயல்பாகவே தங்கள் உறுப்பினர் தகுதியை இழந்து விட்டனர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் இன்று அறிவித்துள்ளார்.

புக்கிட் கந்தாங், குவா மூசாங், தஞ்சோங் காராங், ஜெலி, லாபுவான் மற்றும் கோலகங்சார் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்களே கட்சியின் உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஹம்சா ஜைனுடின் குறிப்பிட்டார்.

பெர்சத்து கட்சி அண்மையில் செய்து கொண்ட அமைப்புச்சட்டத்தின் சட்டத்திருத்த விதியின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்றால் அவர்கள் உடனடியாக தங்கள் தொகுதியை காலி செய்தாக வேண்டும் என்பதாகும். அதன் அடிப்படையில் அந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் தொகுதியை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

WATCH OUR LATEST NEWS