சுங்கை பக்காப் இடைத்தேர்தலில், IAB கழகத்தின் முன்னாள் இயக்குநர் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக களமிறக்கப்படுகின்றார்.

பினாங்கு, ஜூன் 13-

பினாங்கு, சுங்கை பக்காப் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளராக, அமினுதீன் பாக்கி கல்வி கழகத்தின் வடக்கு கிளை முன்னாள் இயக்குநர் ஜோஹரி அரிஃபின், வேட்பாளராக களமிறக்கப்படவுள்ளார்.

நேற்று இரவு நிபோங் தெபால்-லில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில், PKR கட்சி துணைத்தலைவர் ரஃபிஸி ராம்லி அந்த அறிவிப்பை வெளியிட்டார்.

60 வயதுடைய உள்ளூர்வாசியான ஜோஹரி-யை பக்காத்தான் ஹாராப்பான் கூட்டணியின் வேட்பாளராக களமிறக்குவதற்கு, ஒற்றுமை அரசாங்கத்தின் தலைமைத்துவம் இணக்கம் தெரிவித்திருப்பதாக, ஒற்றுமை அரசாங்கத்தின் தேர்தல் பிரிவு இயக்குநருமான அவர் கூறினார்.

அதே நிகழ்ச்சியில், வேட்பாளர் நியமன நாளுக்கு முன்பதாக, தனது சொத்துகளை அறிவிக்க வலியுறுத்தும் உறுதிமொழி கடிதத்தில் ஜோஹரி கையெழுத்திட்டார்.

கடந்த மே மாதம் 24ஆம் தேதி, PAS கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் நோர் ஜம்ரி லத்தீஃப், உடல்நலக் குறைவால் காலமானதை அடுத்து சுங்கை பக்காப் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

வருகின்ற ஜூலை மாதம் 6ஆம் தேதி, அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படுகின்றது.

WATCH OUR LATEST NEWS