சிறுவன் ஜெயின் ரய்யான் கொலை வழக்கு; அவரது பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக பெற்றோர் மீது குற்றச்சாட்டு

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 13-

ஆட்டிசம் குறைபாடு உடைய 6 வயது சிறுவன் ஜெயின் ரய்யான் அப்துல் மத்தின் கொலை செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில், அவரது பராமரிப்பில் அலட்சியம் காட்டியதாக, 29 வயதுடைய பெற்றோர் மீது இன்று சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயா-விலுள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

நீதிபதி டாக்டர் சைலிசா வர்னோ முன்னிலையில் அத்தம்பதியருக்கு எதிராக வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டில், அவ்விருவரின் அலட்சியம் காரணமாகவே, கடந்தாண்டு டிசம்பரில், அச்சிறுவனின் உடலில் காயங்கள் ஏற்பட்டதற்கான சாத்தியம் உள்ளதாக கூறப்பட்டது.

ஆயினும், அக்குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள ஜெயின் ரய்யான்-னின் தந்தை ZAIM இக்வான் ஜஹாரி, தாயார் இஸ்மானிரா அப்துல் மனாஃப் ஆகிய இருவரும், நீதிமன்றத்தில் மேல்விசாரணைக் கோரினர்.

முன்னதாக, கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, மதியம் மணி 12க்கும் மறுநாள் இரவு மணி 9.55க்கும் இடைப்பட்ட காலத்தில், பெட்டாலிங் ஜெயா, PJU டாமன்சர டாமாய்-யிலுள்ள பகுதியில் அவ்விருவரும் அக்குற்றத்தை புரிந்ததாக, குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

2001ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் கீழ், அவ்விருவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவ்விருவருக்கும் அதிகபட்சமாக 50 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கும் மேல்போகாத சிறை அல்லது அவையிரண்டுமே விதிக்கப்படலாம்.

கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, சிலாங்கூர், டாமன்சர டாமாய்-லுள்ள அடுக்ககத்திற்கு அருகாமையில் இருந்த கால்வாயில் சிறுவன் ஜெயின் ரய்யான் சடலமாக மீட்கப்பட்டார்.

WATCH OUR LATEST NEWS