அமெரிக்கா, ஜூன் 14-
அமெரிக்கா அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 25ஆவது போட்டி நியூயார்க்கில் நடைபெற்றது இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அமெரிக்கா அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கேப்டன் மோனன்க் படேல் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்கு பதிலாக ஷயான் ஜஹாங்கீர் இடம் பெற்றுள்ளார். இதே போன்று, நோஸ்துஷ் கென்ஜிகே நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஷாட்லி வான் ஷால்க்விக் அணியில் இடம் பெற்றுள்ளார்.
அதே ஓவரின் கடைசி பந்திலும் விக்கெட் எடுத்தார். ஆண்ட்ரிஸ் கௌஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதல் ஓவரின் முதல் பந்தில் மட்டுமின்றி ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் இந்தியராகவும் அர்ஷ்தீப் சிங் சாதனை படைத்துள்ளார்.
கேப்டன் ஆரோன் ஜோன்ஸ் 11 ரன்களில் வெளியேற, நிதானமாக விளையாடி வந்த ஸ்டீவன் டெய்லர் 24 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த நிதிஷ் குமார் பொறுமையாக விளையாடி 27 ரன்கள் எடுக்கவே, கோரி ஆண்டர்சன் 14 ரன்களும், ஹர்மீத் சிங் 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசியில் வான் ஷால்க்விக் 11 ரன்கள் எடுத்துக் கொடுக்க ஜஸ்தீப் சிங் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், விராட் கோலி, மும்பை வீரரான சவுரப் நெட்ராவால்கர் பந்தில் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்து மோசமான சாதனை படைத்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மாவும் மீண்டும் நெட்ராவால்கர் பந்தில் 3 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ரிஷப் பண்ட் 18 ரன்களில் ஆட்டமிழக்க, கடைசியாக சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் துபே இருவரும் இணைந்து பொறுமையாக விளையாடி ரன்கள் குவித்தனர்.
இந்த வெற்றியின் மூலமாக விளையாடிய 3 போட்டியிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வரும் 24 ஆம் தேதி செயிண்ட் லூசியாவில் நடைபெறும் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.