அமெரிக்கா, ஜூன் 14-
பப்புவா நியூ கினி அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தொடரின் 29ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பப்புவா நியூ கினி அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் 29ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இதில், முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பப்புவா நியூ கினி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக கிப்லின் தோரிகா 27 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் அணியைப் பொறுத்த வரையில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டும், நூர் அகமது ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதில், உமர்சாய் 13 ரன்களில் வெளியேறவே, முகமது நபி மற்றும் குல்பதீன் நைப் இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர். நைப் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நபி 16 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
பப்புவா நியூ கினிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலமாக நியூசிலாந்து சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது. நியூசிலாந்து விளையாடிய 2 போட்டியிலும் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடம் பிடித்திருந்த நிலையில் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்துள்ளது. இதுவரையில் ஒரு முறை கூட நியூசிலாந்து டி20 உலகக் கோப்பையில் டிராபியை கைப்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று, ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் பப்புவா நியூ கினி தோல்வி அடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று வாய்ப்பை இழந்து டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.