5 நிமிடத்தில் காயத்தை சரி செய்த பிசியோ இவர்தான்.. நக்கல்யா உனக்கு.. குல்புதின் நயீப் போட்ட பதிவு!

கிங்ஸ்டவுன், ஜூன் 26-

5 நிமிடத்தில் தொடையில் ஏற்பட்ட காயத்தை சரி செய்த பிசியோ இவர் தான் என்று ஆஃப்கானிஸ்தான் வீரர் குல்புதின் நயீப் அறிமுகம் செய்துள்ளார். ஏற்கனவே குல்புதின் நயீபை ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து வரும் சூழலில், அவர் இன்ஸ்டாகிராமில் பிசியோவுடன் புகைப்படத்தை பதிவிட்டு நக்கல் செய்துள்ள சம்பவம் வரவேற்பை பெற்று வருகிறது.

வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. வங்கதேசம் அணியின் பேட்டிங்கின் போது மழை பெய்ய தொடங்கிய போது, டிஎல்எஸ் விதிப்படி 2 ரன்கள் பின் தங்கியிருந்தது. இதனால் ஆஃப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் டிராட் மழை வருவது போல் உள்ளது. பவுலிங் செய்வதை தாமதப்படுத்துங்கள் என்று ஓய்வறையில் இருந்து சிக்னல் செய்தார்.

இதனை கவனிக்காத ரஷித் கான் பவுலிங் செய்த தயாரான போது, திடீரென ஸ்லிப் திசையில் நின்றிருந்த குல்புதின் நயீப் காலினை பிடித்து கொண்டு குப்புறப்படுத்து வலியில் துடித்தார். எந்த வீரருடன் மோதாமல், ஓட கூட செய்யாமல் எப்படி குல்புதின் நயீப்பிற்கு ஹாம்ஸ்ட்ரிங் பிரச்சனை எழுந்தது என்று வர்ணனையிலேயே கிண்டல் செய்தனர்.

இயான் ஸ்மித் ஒருபடி மேலே சென்று, ஆஸ்கர், எம்மி விருதுகளை அளிக்க வேண்டும் என்று கிண்டல் செய்தார். இதனால் கிட்டத்தட்ட ஒரு 2 நிமிடங்கள் ஆட்டம் தாமதமான நிலையில், மழை வந்ததால் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு கூடுதல் அவகாசம் கிடைத்தது. அதன்பின் மீண்டும் களம் திரும்பிய குல்புதின் நயீப் 16வது ஓவரை வீசி ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

காலில் காயம் ஏற்பட்டதாக கூறி நொண்டி கொண்டே ஓய்வறை சென்ற அவர், 5 நிமிடத்தில் காயம் குணமடைந்ததாக பவுலிங் செய்தார். இதனால் இந்திய ரசிகர்களும் கூட, “குல்புதின் நயீப்பிற்கு ஆஸ்கர் அவார்டை கொடுடா டிரம்ப்பே” என்று மீம்ஸ் வெளியிட்டு வந்தனர். விதிகளின் படி பார்த்தால், குல்புதின் நயீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

WATCH OUR LATEST NEWS