கோலாலம்பூர், ஜூலை 15-
Online வாயிலாக மற்றவர்களை நிந்திக்கும் போக்கு அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கவே செய்கிறது. இது DAP- யின் உதவித் தலைவரும், சட்டத்துறை துணை அமைச்சருமான எம். குலசேகரனையும் விட்டு வைக்கவில்லை.
துணை அமைச்சர் எம். குலசேகரனுக்கு ஓர் இளம் பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கடந்த சில நாட்களாக டிக் டாக்கில் பரவலாக பகிரப்பட்டு வரும் காணொளி ஒன்று புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண்ணுடன் குலசேகரன் நெருக்கமாக இருப்பது போல வெளிவந்துள்ள அந்த காணொளி, தீய நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும் அந்த காணொளி குறித்து இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த ஈப்போ பராத் எம்.பி.யுமான குலசேகரன், தற்போது தாம் ஓர் இளம் பெண்ணுடன் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தமது வயதுடையவர்களுடன் “DATING” செய்யவில்லை என்றும் தமிழில் கூறினார்..
உண்மையிலேயே அந்த காணொளியில் காணப்படும் இளம் பெண், தனது மனைவி என்பதை அவர்கள் உணரவில்லை என்று குலசேகரன் குறிப்பிட்டார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் டிக் டாக்கில் வெளியிடப்பட்ட அந்த காணொளியை தமக்கும் அனுப்பியிருக்கிறார்கள் என்று சத்தியப் பிரமாண உறுதி மொழிக்கான 2024 ஆம் ஆண்டு சட்டத்திருத்த மசோதா மீதான விவாதத்தின் போது குலசேகரன் இதனை தெரிவித்தார்.
இளம் பெண்ணுடன் தமக்கு தொடர்பு இருப்பதாக ஒரு பொய்யான குற்றச்சாட்டு தமக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டாலும் சட்டத்துறை துணை அமைச்சர் என்ற முறையில் தமது தோற்றத்திற்கு களக்கம் ஏற்படாமல் இருப்பதற்கு நாடாளுமன்றத்தில் இந்த விளக்கத்தை அளிக்க தாம் கடமைப்பட்டுள்ளதாக குலசேகரன் விளக்கினார்.
இந்த குற்றச்சாட்டினால் தமது மனைவி மிகவும் வருத்தமும், வேதனையும் கொண்டிருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு இதுபோன்ற எதிர்ப்புகள் பலமாக உள்ளன என்று குலசேகரன் குறிப்பிட்டார்.