கோலாலம்பூர், ஜூலை 16-
டிக்டாக் பிரபலம் ஈஷா தற்கொலை விவகாரம்; குற்றத்தை ஒப்புக்கொண்ட ஷாலினி -க்கு 100 வெள்ளி அபராதம் பிரபலமான ஈஷா என அறியப்படும் 29 வயது A.ராஜேஸ்வரி எனும் பெண், இணையப் பகடிவதை காரணமாக தற்கொலை செய்துக் கொண்டது தொடர்பில், இருவர் மீது இன்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில் தனித்தனியாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
மேஜிஸ்ட்ரெட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முதியவர் பராமரிப்பு இல்லத்தின் உதவியாளர் 35 வயது ஷாலினி பெரியசாமி,
ஈஷா-வுக்கு எதிராக வேண்டுமென்றே தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அவர் அதனை ஒப்புக்கொண்டார்.
அதற்கடுத்து, நீதிபதி அருண்ஜோதி எம் செல்வர்வம், அவருக்கு 100 வெள்ளி அபராதத்தை விதித்து தீர்ப்பளித்தார்.
இதனிடையே, ஈஷா-வுக்கு மருட்டல் விடுத்திருந்த மற்றொரு நபர்
லோரி ஓட்டுநரான 44 வயது B சதீஸ்குமார் எனும் ஆடவர், SESYEN நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
டிக்டாக் -க்கில் DULAL BROTHERS எனும் கணக்கில் ஈஷா-உக்கு எதிராக ஆபாசம் மற்றும் தகாத வார்த்தைகளை உபயோகித்ததாக, நீதிபதி சிதி அமினா கஸாலி முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது, அவர் அதனை ஒப்புக்கொண்டார்.
டிக்டாக் -க்கில் தனக்கு எதிராக இணையப் பகடிவதை மேற்கொள்ளப்படுவதாக, இம்மாதம் 4ஆம் தேதி டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகாரளித்திருந்த ஈஷா , அதன் மறுநாளே தற்கொலை செய்துக்கொண்டது, நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஈஷா அளித்திருந்த புகார் செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டதை அடுத்து, விசாரணையை தொடங்கிய போலீஸ், அவ்விருவரையும் கைது செய்தது.