கோல்பீல்டு தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு நிதி திரட்டும் புதையல் வேட்டைப் போட்டி

கோலசிலாங்கூர், ஜூலை 16-

கோலசிலாங்கூர் மாவட்டத்திற்கு உட்பபட்ட கோல்ஃபீல்டு (Coal Field ) தோட்டத் தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட புதையல் தேடும் போட்டியில் 55 கார்களில் மொத்தம் 220 பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டு நிகழ்விற்கு சிறப்பு சேர்த்தனர்.

கோல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியிலிருந்து தொடங்கி கோலா சிலாங்கூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதையல் தேடும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டது.

மலேசியத் தமிழ்நெறிக் கழகமும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமும் இணைந்து இப்புதையல் தேடும் போட்டியை ஏற்பாடு செய்தன.

இந்த புதையல் வேட்டை மூலம் சுமார் 20 ஆயிரம் வெள்ளி நிதி திரட்டப்பட்டது. இது மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் மூத்தப் பொறுப்பாளர் அமரர் பழ. வீரனின் நினைவாக சுழற்கிண்ணப் போட்டியாக நடத்தப்பட்டது.

மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தினால் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி திரட்டும் நோக்கில் வெற்றிகரமாக இரண்டாவது முறை நடத்தப்படுவதாக கோல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மகேசுவரன் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு புக்கிட் ரோத்தான் தமிழ்ப்பள்ளியின் கணினி அறையினை அமைப்பதற்காக இப்போட்டி நடத்தப்பட்டு 15 ஆயிரம் வெள்ளி திரட்டப்பட்டது.

மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தலைவர் தமிழ்த்திரு திருமாவளவன் தமது உரையில் , தமிழ்ப்பள்ளிகள் நம் மொழிக்கும் இனத்திற்குமான தனிப்பெரும் அடையாளமாகும் என்றார்.

தமிழ்ப்பள்ளி வளர்ச்சிக்காக நாம் இது போன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ்ப்பள்ளிக்குப் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களைப் பெரிதும் பாராட்ட வேண்டும். இவர்களைப் போல ஏனையோரும் தமிழ்ப்பள்ளிகளையே தம் தேர்வாக வைத்து பிள்ளை அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இப்போட்டியை பிரதமரின் அரசியல் செயலாளர் மணிவண்ணன் கோவின், பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி அம்புஜம் கண்ணன், திருமாவளவன், பூங்குழலி வீரன் ஆகியோர் கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

முதல் பரிசை தமிழரசி, அருள்விழி, அருள்நங்கை, தென்னரசி ஆகியோர் வென்றனர், அவர்களுக்கு 1,500 வெள்ளி தொகை பரிசாக வழங்கப்பட்டது.

WATCH OUR LATEST NEWS