அமெரிக்கா, ஜூலை 22-
அமெரிக்காவின் டெலவேர் மாகாணத்தின் வில்மிங்டன் நகரில் இருக்கும் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியர், முன்னாள் மாணவர் ஒருவருக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியதாக குற்றம் நிரூபணமாகி உள்ளது. பள்ளியில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பெண் ஆசிரியர் தான் இந்த மோசமான செயலில் ஈடுபட்டிருக்கிறார். நியூ கேஸ்டில் கவுண்டி போலீசாரால் கடந்த வியாழக்கிழமை (ஜூலை 18) அன்று அந்த பெண் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அந்த ஆசிரியரின் பெயர் அலனிஸ் பினியன். அவரின் வயது 24 ஆகும்.
பெண் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து போலீசார் ஊடகத்திடம் கூறுகையில்,”ஸ்னாப்சாட் செயலி மூலமாக அலனிஸ் அவரின் மாணவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். ஸ்னாப்சாட்டில் அவரின் மாணவர்களுள் ஒருவருக்கு, ஏற்கத்தகாத ஆபாச புகைப்படங்களை அலனிஸ் அனுப்பியிருக்கிறார்” என்றனர்.
சிறையில் பெண் ஆசிரியர்
தற்போது கைது செய்யப்பட்ட அலனிஸ் பினியன் ஒரு சிறுவனின் நலனுக்கு உந்தகம் விளைவித்ததாகவும், தவறான பழக்கத்தை தூண்டியதாகவும் கூறி, சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் செயலில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பிணை வழங்க நீதிமன்றம் 46 ஆயிரம் அமெரிக்க டாலர் அபாரதம் விதித்திருந்தது, அதனை கட்டத் தவறியதால் அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், அவர் அந்த பள்ளியில் பயிற்சி பெற்று வரும் ஒப்பந்த ஆசிரியர் என்றும் அவருக்கும் பள்ளிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளி நிர்வாகம்,”கடந்த வாரம் காவல் நிலையத்தில் இருந்து பள்ளியை தொடர்புகொண்டு, முன்னாள் மாணவர் ஒருவருக்கு டிஜிட்டல் ரீதியாக ஆபாசப் புகைப்படம் அனுப்பியதாக புகார் வந்திருப்பதாகவும் அதை தொடர்ந்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு விசாரணையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்” என தெரிவித்தது.
மேலும், அந்த ஒப்பந்த ஆசிரியர் குறித்து அனைத்து பின்னணி விவரங்களும் சரிபார்க்கப்பட்டு அதற்கு பின்னர்தான் பணி வழங்கப்பட்டது எனவும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பள்ளி நிர்வாகம் போலீசார் விசாரணைக்கு ஒத்துழைக்கும் என்றும் தெரிவித்தது. மேலும், பெற்றோர்களுடன் இணைந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதையே அடிப்படையாக கொண்டு இப்பள்ளி இயங்குவதாக நிர்வாகம் விளக்கம் தெரிவித்துள்ளது.