மலேசிய மாணவர்களை மீட்க வங்காளதேசத்திற்கு தனி விமானம் அனுப்பப்படும்

புத்ராஜெயா, ஜூலை 22-

அரசாங்க வேலை ஒதுக்கீட்டு முறையை எதிர்த்து வங்காளதேசத்தில் பல்லைக்கழக மாணவர்கள் நடத்திய வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் அந்த நாட்டில் பயின்று வரும் மலேசிய மாணவர்களை மீட்பதற்கு தனி விமானம் அனுப்பப்படும் என்று வெளியுறவு அமைச்சர் முகமட் ஹசன் தெரிவித்தார்.

மலேசிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் தாயகத்திற்கு கொண்டு வரப்படுவர் என்று முகமட் ஹசன் குறிப்பிட்டார்.

மலேசிய மாணவர்களை தாயகத்திற்கு கொண்டு வருவது தொடர்பில் தற்போது ஏர் ஆசிய விமான நிறுவனத்துடன் ஒத்துழைப்பு கொள்ளப்பட்டுள்ளது. நாளை செவ்வாய்க்கிழமை மலேசிய மாணவர்கள் அனைவரும் வங்காளதேசத் தலைநகர் டாக்காவிலிருந்து தாயகத்திற்கு கொண்டு வரப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.

வங்காளதேசத்தில் கடந்த இரு வாரங்களாக மாணவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் இதுவரையில் 133 பேர் கொல்லப்பட்டனர். மாணவர்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியதைத் தொடர்ந்து அந்நாட்டில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

1971ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து வங்காளதேசத்தை விடுவித்து, சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிய குடும்பங்களுக்கு அரசாங்க வேலையில் 30% ஒதுக்கப்பட வேண்டும் என்று ஒதுக்கீட்டுக் கொள்கையில் கூறப்பட்டு உள்ளது.

இந்த ஒதுக்கீடு முறை பாரபட்சமானது என்று மாணவர்கள் வாதிடுகின்றனர். அரசாங்க வேலை வாய்ப்பில் தகுதி அடிப்படையில் ஆட்சேர்ப்பு நடைபெற வேண்டும் என்று கோரி, மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

WATCH OUR LATEST NEWS