ஜோகூர், ஜூலை 22-
ஜோகூர், இஸ்கந்தர் புத்தேரி-யில் உள்ள ஒரு வர்த்தகத் தளத்தில் கடந்த சனிக்கிழமை காணாமல் போன 6 வயது ஆல்பர்டைன் லியோ ஹுய் என்ற சிறுமியை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியிருப்பதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமிஷனர் M. குமார் தெரிவித்தார்.
அந்த சிறுமியை தேடுவதில் போலீசாருக்கு இடம் அளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் கமிஷனர் குமார் கேட்டுக்கொண்டார்.
அதேவேளையில் அந்த சிறுமி குறித்து தவறான தகவல்களை பகிர வேண்டாம் என்று பொது மக்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
அந்த சிறுமியைப் பற்றி துல்லியமான தகவல் கிடைத்தால் மட்டுமே அது குறித்து தெரியப்படுத்த வேண்டும். அனுமானத்தின் பேரில் தகவல் தர வேண்டாம் என்று கமிஷனர் குமார் வலியுறுத்தினார்.
அந்த சிறுமியை பாங்குனன் சுல்தான் இஸ்கந்தர்-ரில் பொது மக்கள் பார்த்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் தகவல் குறித்து கமிஷனர் குமார், கருத்துரைக்க மறுத்து விட்டார்.